களிமண் பட்டகங்களில் எழுதப்பட்ட சனகெரிப்பின் வருடாந்திரக் குறிப்புகள், அவன் எசேக்கியாவை எருசலேமில் “கூண்டில் அடைத்த பறவையைப் போல” அடைத்து வைத்துக் கப்பம் வாங்கியதாகப் பெருமை பேசுகின்றன — ஆனால் நகரம் வீழ்ந்ததாகச் சொல்லவில்லை. நினிவேயில் இருந்த அவனுடைய அரண்மனையின் சுவர்கள் லாகீசின் முற்றுகையைக் காட்டின.
கலைக்களஞ்சியம் › இதற்கிடையில் உலகில்
வேதாகமத்தில் · கி.மு. 701 · எருசலேம்
எருசலேம் தப்புகிறது
அசீரிய ராஜாவான சனகெரிப் எருசலேமை அச்சுறுத்தும்போது, எசேக்கியா ராஜா தேவாலயத்தில் ஜெபம் செய்கிறான். சனகெரிப்பின் சொந்த ஆண்டுக்குறிப்புகள் இந்தப் படையெடுப்பை விவரிக்கின்றன.
எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான். அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையை அசைக்கிறாள். “யாரை அவமதித்து தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்? உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும், நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய். நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன். அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள். உன் உட்காருதலையும், போக்கையும், வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன். நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.” உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை. அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள். அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.அதே நேரத்தில் உலகில்
கி.மு. 701-இல் அசீரிய ராஜாவாகிய சனகெரிப் யூதாவின்மேல் படையெடுத்தான்; எசேக்கியா ராஜாவின் கீழ் இருந்த எருசலேம் தப்பியது. ஏசாயா தீர்க்கதரிசி சுமார் கி.மு. 740 முதல் ஊழியம் செய்துவந்தான். ஏசாயாவின் வாழ்நாளில் உலகம் இப்படி இருந்தது.
ரோம மரபின்படி, ரோமுலஸ் கி.மு. 753 ஏப்ரல் 21 அன்று ரோமை நிறுவினான் — ஏசாயாவின் அழைப்புக்குச் சில ஆண்டுகளுக்கு முன் (ஏசாயா 6:1). பாலட்டீன் குன்றில் அதற்கும் முன்பே கிராமங்கள் இருந்ததை அகழ்வாய்வு காட்டுகிறது.
ஏறக்குறைய அதே காலத்தில் இலியட், ஒடிஸி ஆகியவை நாம் அறிந்த எழுத்து வடிவத்தைப் பெற்றன; அறிஞர்கள் அவற்றைச் சுமார் கி.மு. 750-க்கும் 650-க்கும் இடைப்பட்ட காலத்துக்குரியவை என்கிறார்கள். கிரேக்கர்கள் அப்போதுதான் பெனிக்கேய எழுத்துகளை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
சீன அரசான லூவின் வரலாற்றுக் குறிப்பேடான வசந்த-இலையுதிர் வருடாந்திரக் குறிப்புகள் கி.மு. 722-இல் தொடங்குகின்றன — சமாரியா அசீரியாவிடம் வீழ்ந்த ஆண்டு அது (2 இராஜாக்கள் 17:6). மரபின்படி, பின்னர் கன்பூசியஸ் அதைத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார்.
எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா சனகெரிப்போடு போரிடப் புறப்பட்டதாக 2 இராஜாக்கள் 19:9 சொல்கிறது. தஹர்க்கா கி.மு. 690-இல் பார்வோனானார்; ஒரு கருத்தின்படி, 701-இல் அவர் இளம் இளவரசராகப் படையை வழிநடத்தினார்; விவரங்களை அறிஞர்கள் விவாதிக்கிறார்கள்.
குதிரையேறும் சித்தியர்கள் கிழக்கிலிருந்து கருங்கடலுக்கு வடக்கே உள்ள புல்வெளிகளுக்கு வந்தார்கள். அவர்களுடைய தலைவர்கள் பின்னர் குர்கான்கள் எனப்படும் பெரிய மேடுகளின் கீழ், நுட்பமான பொன்வேலைப்பாடுகளோடு அடக்கம்செய்யப்பட்டார்கள்; அவற்றில் பல இன்றைய உக்ரைனிலும் தெற்கு ரஷ்யாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரங்கள்: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்