நேபுகாத்நேச்சார் பாபிலோனை மாபெரும் அளவில் மீண்டும் கட்டினான். நீல நிறப் பளபளப்புச் செங்கற்களாலும், காளைகள், டிராகன்களின் வரிசைகளாலும் போர்த்தப்பட்ட அதன் இஷ்தார் வாயில், அகழ்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளைக் கொண்டு பெர்லினில் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
கலைக்களஞ்சியம் › இதற்கிடையில் உலகில்
வேதாகமத்தில் · கி.மு. 587/586 · எருசலேம்
எருசலேமின் வீழ்ச்சி
நேபுகாத்நேச்சாரின் பாபிலோனியப் படை எருசலேமுக்குள் உடைத்து நுழைந்து, தேவாலயத்தைச் சுட்டெரித்து, மக்களைச் சிறையாகக் கொண்டுபோகிறது.
அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான். அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது. அதே வருடத்தில் நான்காம் மாதம் ஒன்பதாம்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு உணவு இல்லாமல்போனது; நகரத்தின் மதிலில் உடைப்பு ஏற்பட்டது. அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள். கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது. அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து, சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருட ஆட்சியிலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எருசலேமுக்கு வந்து, யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான். மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள். நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான். தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சைத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான். யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள். செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள். சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான். சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை. ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது. மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான். நகரத்திலே அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய அதிகாரி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் பிடிபட்ட ஐந்துபேரையும், தேசத்தின் மக்களைப் படையில் சேர்க்கிற படைத்தலைவனின் தலைமைச் செயலாளனையும், நகரத்தில் பிடிப்பட்ட பொதுமக்களில் அறுபதுபேரையும் பிடித்தான். அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான். அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதாமக்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.அதே நேரத்தில் உலகில்
பாபிலோனின் நேபுகாத்நேச்சார் கி.மு. 597-இல் எருசலேமைப் பிடித்து, கி.மு. 587-இலோ 586-இலோ அதை அழித்தான் (ஆதாரங்கள் இரண்டுக்கும் இடம் தருகின்றன). ஒரு பாபிலோனிய வரலாற்றுக் குறிப்புப் பலகை முதல் கைப்பற்றலின் நாளைக்கூடத் தருகிறது: ஆதார் மாதம் 2-ஆம் தேதி, கி.மு. 597 மார்ச் நடுப்பகுதி. அந்த ஆண்டுகளில் உலகம் இப்படி இருந்தது.
மிலேத்துவின் தத்துவஞானி தாலஸ், லீதியர்களுக்கும் மேதியர்களுக்கும் இடையிலான ஒரு போரை நிறுத்திய சூரிய கிரகணத்தை முன்னறிவித்ததாக ஹெரோடோட்டஸ் சொல்கிறார்; வானியலாளர்கள் அதைக் கி.மு. 585 மே 28 என்று கணிக்கிறார்கள். தாலஸ் உண்மையில் அதை முன்னறிவித்தாரா என்பது விவாதத்துக்குரியது.
இன்றைய மேற்குத் துருக்கியில் உள்ள லீதியாவில், பொன்னும் வெள்ளியும் இயற்கையாகக் கலந்த எலெக்ட்ரம் என்ற உலோகத்தில், சிங்கத் தலை முத்திரையோடு முதல் நாணயங்கள் அடிக்கப்பட்டன. அதற்கு முன் வெள்ளி நிறுத்துக் கொடுக்கப்பட்டது; “எடை” என்று பொருள்படும் சேக்கல் என்ற சொல் இதை நினைவூட்டுகிறது.
மெகிதோவில் யோசியா ராஜாவைக் கொன்ற பார்வோன் இரண்டாம் நேகோ (2 இராஜாக்கள் 23:29), நைலிலிருந்து செங்கடலுக்கு ஒரு கால்வாயைத் தொடங்கினார். அவர் அனுப்பிய கடலோடிகள் ஆப்பிரிக்காவைச் சுற்றிப் பயணம் செய்ததாகவும் ஹெரோடோட்டஸ் தெரிவிக்கிறார்.
மிலேத்துவிலிருந்து வந்த கிரேக்கர்கள் கருங்கடலின் வடக்குக் கரையில் வணிக நகரங்களை நிறுவினார்கள்: சுமார் கி.மு. 600-இல் கிரிமியாவின் இன்றைய கெர்ச்சான பாண்டிகாப்பேயம், இன்றைய உக்ரைனில் தென் பூக் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகில் ஒல்பியா. அவர்கள் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் கொடுத்துத் தானியமும் மீனும் வாங்கினார்கள்.
வட இந்தியாவில், கங்கையும் அதன் கிளையாறுகளும் ஓடும் பகுதிகளில் புதிய நகரங்களைச் சுற்றி, மகாஜனபதங்கள் எனப்படும் பதினாறு அரசுகளும் குடியரசுகளும் வளர்ந்தன. அவற்றில் ஒன்றான மகதம் பின்னர் இந்தியாவின் முதல் பெரிய பேரரசுகளின் மையமானது.
ஆதாரங்கள்: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்