Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › நற்செய்தி நூல்கள் அருகருகே › கலிலேயாவில்

நற்செய்தி நூல்கள் அருகருகே · கலிலேயாவில்

அடையாளம் கேட்கப்படுகிறது; பரிசேயர்களின் புளித்த மாவு

மத் 16:1–12 · மாற் 8:11–21

மத்தேயு

மத் 16:1–12

1பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

2அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.

3உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?

4இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

5அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

6இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.

7நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

8இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?

9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

10ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?

11பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

மாற்கு

மாற் 8:11–21

11அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

13அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.

14சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.

15அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.

16அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

17இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா?

18உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா?

19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.

20நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.

21அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்