Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › நற்செய்தி நூல்கள் அருகருகே › எருசலேமுக்குப் போகும் வழியில்

நற்செய்தி நூல்கள் அருகருகே · எருசலேமுக்குப் போகும் வழியில்

எரிகோவில் குருடர்கள்

மத் 20:29–34 · மாற் 10:46–52 · லூக் 18:35–43

மத்தேயு

மத் 20:29–34

29அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

30அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

31அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.

32இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.

33அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

34இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மாற்கு

மாற் 10:46–52

46பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

47அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.

48அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

49இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.

50உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.

51இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.

52இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

லூக்கா

லூக் 18:35–43

35பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

37நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

38முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.

39இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

40அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:

41நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

43உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்