1இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார்.
2திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.
3அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.
4அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
7அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
11அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.