Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › நற்செய்தி நூல்கள் அருகருகே › இயேசுவின் பாடுகள்

நற்செய்தி நூல்கள் அருகருகே · இயேசுவின் பாடுகள்

பிரதான ஆசாரியனுக்கும் ஆலோசனைச் சங்கத்துக்கும் முன்பாக

மத் 26:57–68 · மாற் 14:53–65 · லூக் 22:63–71

மத்தேயு

மத் 26:57–68

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.

58பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.

59பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

60ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:

61தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

65அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.

66உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.

67அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

68கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

மாற்கு

மாற் 14:53–65

53இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.

54பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.

55அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை.

56அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.

57அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,

58அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.

59அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.

60அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

61அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

62அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.

63பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா?

64தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

65அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

லூக்கா

லூக் 22:63–71

63இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,

64அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

65மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.

66விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

67நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

68நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.

69இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார்.

70அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.

71அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்