Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › விருந்தோம்பல்

அன்றாட வாழ்க்கை

வேதாகமத்தில் விருந்தோம்பல்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 45 பகுதிகள், வரி வரியாக.

  • அந்நியனை நேசியுங்கள்; நீங்களும் எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள்யாத் 22:21, யாத் 23:9, லேவி 19:33–34, உபா 10:19
    வசனங்கள்
    யாத் 22:21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
    யாத் 23:9அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
    லேவி 19:33–34“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
    உபா 10:19நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக.
  • ஏழைகளையும் வீடில்லாதவர்களையும் உன் வீட்டில் சேர்த்துக்கொள்ஏசா 58:7
    வசனங்கள்
    ஏசா 58:7பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.
  • உன் விருந்துக்கு ஏழைகளையும் ஊனர்களையும் சப்பாணிகளையும் குருடர்களையும் அழைலூக் 14:12–14
    வசனங்கள்
    லூக் 14:12–14அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
  • ஒவ்வொரு கவளத்தையும் கணக்கிடும் கஞ்சனான விருந்தாளியிடம் எச்சரிக்கையாக இருநீதி 23:6–8
    வசனங்கள்
    நீதி 23:6–8பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவனும் இருக்கிறான்; சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.
  • முறுமுறுப்பில்லாமல் விருந்தோம்பல் செய்யுங்கள்ரோமர் 12:13, 1 பேது 4:9
    வசனங்கள்
    ரோமர் 12:13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.
    1 பேது 4:9முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
  • சிலர் அறியாமலேயே தேவதூதர்களை உபசரித்திருக்கிறார்கள்எபி 13:2
    வசனங்கள்
    எபி 13:2அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.
  • சபைத் தலைவர்கள் விருந்தோம்புகிறவர்களாக இருக்கவேண்டும்1 தீமோ 3:2, தீத் 1:8
    வசனங்கள்
    1 தீமோ 3:2எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
    தீத் 1:8அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
  • அந்நியரை உபசரித்து, பாதங்களைக் கழுவியதற்காக அறியப்பட்ட விதவை1 தீமோ 5:10
    வசனங்கள்
    1 தீமோ 5:10குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எடுத்துக்காட்டுகள்

  • மெல்கிசேதேக்கு ஆபிராமுக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவருகிறான்ஆதி 14:18
    வசனங்கள்
    ஆதி 14:18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து,
  • ஆபிரகாம் மூன்று அந்நியரைச் சந்திக்க ஓடி, அவர்களுக்கு உணவு பரிமாறுகிறான்ஆதி 18:1–8
    வசனங்கள்
    ஆதி 18:1–8பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து: “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “நீ சொன்னபடி செய்” என்றார்கள். அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள்.
  • சோதோமில் லோத்து இரண்டு விருந்தினரைத் தன் வீட்டில் சேர்த்துக்கொள்கிறான்ஆதி 19:1–3
    வசனங்கள்
    ஆதி 19:1–3அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து: “ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம்” என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள்.
  • அபிமெலேக்கு ஆபிரகாமிடம்: உனக்கு விருப்பமான இடத்தில் குடியிருஆதி 20:14–15
    வசனங்கள்
    ஆதி 20:14–15அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். பின்னும் அபிமெலேக்கு: இதோ, “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்கு விருப்பமான இடத்தில் குடியிரு” என்று சொன்னான்.
  • லாபான் வீட்டையும் ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்துகிறான்ஆதி 24:31–33
    வசனங்கள்
    ஆதி 24:31–33அப்பொழுது அவன்: “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன்” என்றான். அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான்.
  • லாபான் யாக்கோபைச் சந்திக்க ஓடிவந்து அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்ஆதி 29:13–14
    வசனங்கள்
    ஆதி 29:13–14லாபான் தன் சகோதரியின் மகனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைத் தழுவி முத்தம்செய்து, தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாக லாபானுக்குச் சொன்னான். அப்பொழுது லாபான்: “நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்” என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
  • ஈசாக்கு அபிமெலேக்குக்கும் அவனுடைய ஆட்களுக்கும் விருந்து செய்கிறான்ஆதி 26:26–30
    வசனங்கள்
    ஆதி 26:26–30அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: “ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே” என்றான். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம். நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள். அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
  • யோசேப்பு எகிப்தில் தன் சகோதரர்களோடு உணவருந்துகிறான்ஆதி 43:31–34
    வசனங்கள்
    ஆதி 43:31–34பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு வையுங்கள்” என்றான். எகிப்தியர்கள் எபிரெயரோடு சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனியாகவும், அவர்களுக்குத் தனியாகவும், அவனோடு சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனியாகவும் வைத்தார்கள். அவனுக்கு முன்பாக, மூத்தவன்முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த உணவில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லோருடைய பங்குகளைவிட பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் குடித்து, அவனோடு சந்தோஷமாயிருந்தார்கள்.
  • பார்வோன் யாக்கோபின் குடும்பத்திற்கு தேசத்தின் சிறந்த பகுதியைக் கொடுக்கிறான்ஆதி 45:17–20, ஆதி 47:11–12
    வசனங்கள்
    ஆதி 45:17–20பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய், உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான்.
    ஆதி 47:11–12பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
  • எத்திரோ: அவனை உணவு உண்ண அழைத்து வாருங்கள்யாத் 2:20
    வசனங்கள்
    யாத் 2:20அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.
  • ராகாப் இரண்டு வேவுகாரரைத் தன் வீட்டின் மேல்தளத்தில் மறைக்கிறாள்யோசு 2:1–6
    வசனங்கள்
    யோசு 2:1–6நூனின் மகனாகிய யோசுவா சித்தீம் பாளையத்திலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
  • கிபியாவின் ஒரு முதியவர் பயணம் செய்யும் லேவியனைத் தன் வீட்டில் சேர்த்துக்கொள்கிறார்நியா 19:16–21
    வசனங்கள்
    நியா 19:16–21வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு முதியவர் வந்தார்; அந்த மனிதனும் எப்பிராயீம் மலைதேசத்தை சார்ந்தவன், அவன் கிபியாவிலே வாழ வந்தான்; அந்த இடத்தின் மனிதர்களோ பென்யமீனர்கள். அந்த முதியவர் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்த பயணியைப் பார்த்து: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் மிகவும் தொலை தூரம் வரைப் போகிறோம்; நான் அந்த இடத்தைச் சேர்ந்தவன்; யூதாவிலுள்ள பெத்லெகேம்வரைப் போய்வந்தேன், நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரும் இல்லை. எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் ரொட்டியும் திராட்சை ரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான். அப்பொழுது அந்த முதியவர்: உனக்குச் சமாதானம் உண்டாவதாக; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமட்டும் இரவு தங்கவேண்டாம் என்று சொல்லி, அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.
  • பார்வோன் இளைஞனாகிய ஆதாத்துக்கு வீடும் நிலமும் கொடுக்கிறான்1 இராஜா 11:17–19
    வசனங்கள்
    1 இராஜா 11:17–19ஆதாதும் அவனோடு அவனுடைய தகப்பனுடைய வேலைக்காரர்கள் சில ஏதோமியர்களும் எகிப்திற்கு ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாக இருந்தான். அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனிதர்களை எகிப்திற்குக் கூட்டிக்கொண்டு, பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு உணவுக்கு ஏற்பாடுசெய்து, நிலத்தையும் கொடுத்தான். ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயவு கிடைத்ததால், அவனுடைய ராணியாகிய தாப்பெனேஸ் என்னும் தன்னுடைய மனைவியின் சகோதரியை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
  • சாரிபாத் விதவை தன் கடைசி மாவையும் எண்ணெயையும் எலியாவோடு பகிர்கிறாள்1 இராஜா 17:10–16
    வசனங்கள்
    1 இராஜா 17:10–16அப்படியே அவன் எழுந்து, சாரிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் வாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம். யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
  • சூனேம் ஊர்ப் பெண் எலிசாவுக்கு ஒரு அறையைக் கட்டுகிறாள்2 இராஜா 4:8–10
    வசனங்கள்
    2 இராஜா 4:8–10பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான். அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
  • பிடிபட்ட சீரியப் படைவீரர்களுக்கு உணவளித்து வீட்டிற்கு அனுப்பும்படி எலிசா செய்கிறான்2 இராஜா 6:22–23
    வசனங்கள்
    2 இராஜா 6:22–23அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
  • யோபு: வழிப்போக்கனுக்கு என் கதவு திறந்திருந்ததுயோபு 31:32
    வசனங்கள்
    யோபு 31:32அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
  • மார்த்தாள் இயேசுவை வரவேற்கிறாள்; பெத்தானியாவில் அவருக்கு ஒரு விருந்துலூக் 10:38, யோவா 12:1–2
    வசனங்கள்
    லூக் 10:38பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
    யோவா 12:1–2பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான்.
  • ஒரு பரிசேயன் இயேசுவை உணவருந்த அழைக்கிறான்லூக் 11:37
    வசனங்கள்
    லூக் 11:37இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.
  • சகேயு இயேசுவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறான்லூக் 19:5–6
    வசனங்கள்
    லூக் 19:5–6இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
  • யோப்பாவில் பேதுரு தோல் பதனிடுகிற சீமோனிடம் தங்குகிறான்அப் 9:43, அப் 10:6
    வசனங்கள்
    அப் 9:43பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.
    அப் 10:6அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
  • பேதுரு கொர்நேலியுவின் தூதர்களை விருந்தினராக உள்ளே அழைக்கிறான்அப் 10:23
    வசனங்கள்
    அப் 10:23அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
  • லீதியாள் பவுலையும் அவனுடைய தோழர்களையும் தன் வீட்டில் தங்கும்படி வற்புறுத்துகிறாள்அப் 16:15
    வசனங்கள்
    அப் 16:15அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.
  • மெலித்தா: தீவார் நெருப்பு மூட்டுகிறார்கள்; புபிலியு அவர்களை மூன்று நாட்கள் உபசரிக்கிறான்அப் 28:2, அப் 28:7
    வசனங்கள்
    அப் 28:2அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
    அப் 28:7தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
  • ஒநேசிப்போரு பலமுறை பவுலுக்கு இளைப்பாறுதல் அளித்தான்2 தீமோ 1:16
    வசனங்கள்
    2 தீமோ 1:16ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
  • காயு தனக்கு அறிமுகமில்லாத பயணம் செய்யும் விசுவாசிகளை வரவேற்கிறான்3 யோவா 1:1, 3 யோவா 1:5–8
    வசனங்கள்
    3 யோவா 1:1மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
    3 யோவா 1:5–8பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • வாக்களித்தபடியே எரிகோவில் ராகாபும் அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்படுகிறார்கள்யோசு 6:22–25
    வசனங்கள்
    யோசு 6:22–25யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் யெகோவாவின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்