Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 26 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 13 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 26 ஏப்ரல், 2027

திங்கள் · புனித வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

மகா புனித திங்கள்

பெரிய தவக்காலம்

கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நற்செய்தி (மணவாளனின் காலை ஜெபம்)

மத் 21:18–43

18காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. 19அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. 20சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 23அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணும்போது, பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். 24இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 25யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; 26மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து, 27இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார். 28ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆனாலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான். 30இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார். 33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான். 34அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான். 35தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார். 41அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள். 42இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா? 43ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆறாம் மணி ஜெபம்

எசேக் 1:1–20

1என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன். 2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது. 3அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. 4இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது. 5அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது. 6அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. 7அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன. 8அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன. 9அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன. 10அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன. 11அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின. 12அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. 13உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. 14அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. 15நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். 16சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது. 17அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை. 18அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. 19அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. 20உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

மாலை ஜெபம்: வாசகம்

யாத் 1:1–20

1எகிப்திற்குப் போன இஸ்ரவேலுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 2இசக்கார், செபுலோன், பென்யமீன், 3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. 4இவர்கள் யாக்கோபுடன் தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள். 5யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர். 6யோசேப்பும் அவனுடைய சகோதரர்கள் அனைவரும், அந்தத் தலைமுறையினர் எல்லோரும் மரணமடைந்தார்கள். 7இஸ்ரவேலர்கள் அதிகமாக பலுகி, ஏராளமாகப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. 8யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான். 9அவன் தன்னுடைய மக்களை நோக்கி: “இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள். 10அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும்” என்றான். 11அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள். 12ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். 13எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள். 14கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள். 15அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளுடன் பேசி: 16“நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான். 17மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள். 18அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான். 19அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள். 20இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.

மாலை ஜெபம்: வாசகம்

யோபு 1:1–12

1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள். 3அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 4அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள். 5விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே நிந்தித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை வரவழைத்து, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லோருடைய எண்ணிக்கையின் வரிசையில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்த முறையில் யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். 6ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 7யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 8யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 9அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? 10நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது. 11ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். 12யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

நற்செய்தி (முன்பே அர்ச்சிக்கப்பட்ட காணிக்கைகளின் திருவழிபாடு)

மத் 24:3–35

3பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 4இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; 5ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள். 6யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். 13இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். 15மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது, 16யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். 17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும். 18வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும். 19அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. 20நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். 22அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும். 23அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள். 24ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். 27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும். 30அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள். 31வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். 32அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். 33அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். 34இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 13 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 26 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்