Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 25 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 12 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 25 ஏப்ரல், 2027

ஞாயிறு

பண்டிகைகளும் புனிதர்களும்

குருத்தோலை ஞாயிறு. நம்முடைய கர்த்தர் எருசலேமுக்குள் பிரவேசித்தல்

பெரிய தவக்காலம்

மீன் அனுமதி

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம்

ஆதி 49:1–2, 8–12

1யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். 2யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. 8யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். 9யூதா பெரிய சிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். 11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். 12அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும்.

மாலை ஜெபம்: வாசகம்

செப்ப 3:14–19

14மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. 15யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். 16அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். 17உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார். 18உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன். 19இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின அனைவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த எல்லா தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்.

மாலை ஜெபம்: வாசகம்

சகரி 9:9–15

9மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். 10எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும். 11உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன். 12நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 13நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன். 14அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். 15சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.

காலை ஜெபம்: நற்செய்தி

மத் 21:1–11, 15–17

1அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: 2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 3ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று, 5தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 6சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள். 9முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். 15அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து, 16அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார். 17அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.

நிருபம்

பிலி 4:4–9

4கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். 5உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார். 6நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும். 8கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.

நற்செய்தி

யோவா 12:1–18

1பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். 2அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். 3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது. 4அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: 5இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான். 6அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். 7அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 8ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார். 9அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள். 10லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால், 11பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள். 12அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, 13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள். 14அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி, 15இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார். 16இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். 17அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள். 18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 12 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 25 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்