Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 27 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 14 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 27 ஏப்ரல், 2027

செவ்வாய் · புனித வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

மகா புனித செவ்வாய்

பெரிய தவக்காலம்

கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நற்செய்தி (மணவாளனின் காலை ஜெபம்)

மத் 22:15–23:39

15அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து, 16தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 17ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 18இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 19வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 20அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். 21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள். 23உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து: 24போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. 25எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். 26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். 27எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். 28ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். 29இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். 30உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்; 31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? 32தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார். 33மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 34அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 35அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். 37இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; 38இது முதலாம் பெரிய கட்டளை. 39இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. 40இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். 41பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. 45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். 46அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை. 23:1பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: 2வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; 3ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், 7சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். 8நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். 9பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். 10நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார். 11உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். 12தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 13மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. 14மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். 15மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 16குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 19மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான். 21தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். 22பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். 23மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே. 24குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். 25மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. 26குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 27மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். 28அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். 29மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து: 30எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். 32நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். 33சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? 34ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 35நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 36இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 37எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது. 38இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். 39கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆறாம் மணி ஜெபம்

எசேக் 1:21–28

21அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. 22உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. 23மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. 24அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன. 25அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. 26அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது. 27அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். 28மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

மாலை ஜெபம்: வாசகம்

யாத் 2:5–10

5அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். 6அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள். 7அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள். 8அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். 9பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.

மாலை ஜெபம்: வாசகம்

யோபு 1:13–22

13பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது, 14ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது, 15சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 16இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய நெருப்பு விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 17இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 18இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது, 19வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான். 20அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: 21நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான். 22இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

நற்செய்தி (முன்பே அர்ச்சிக்கப்பட்ட காணிக்கைகளின் திருவழிபாடு)

மத் 24:36–26:2

36அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். 37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். 38எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், 39பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். 40அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். 41இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். 42உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். 43திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள். 44நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள். 45ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? 46எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். 47தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, 49தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், 50அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, 51அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 25:1அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். 2அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். 3புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 4புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 5மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. 7அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். 8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. 11பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 14அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. 15அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். 16ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். 17அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். 18ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். 19அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். 20அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 21அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 22இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 23அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 24ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். 25ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். 26அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. 27அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, 28அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். 29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். 31அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். 37அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? 38எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? 39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; 43அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். 26:1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: 2இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 14 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 27 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்