18:13யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.
18:14அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.
18:15ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
18:16அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.
18:17ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று,
18:18ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
18:19ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
18:20போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
18:21இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
18:22நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
18:23நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய்.
18:24செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
18:25இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான்.
18:26அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியார்களோடு சீரியமொழியிலே பேசும், அந்த மொழி எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களோடே எபிரேய மொழியிலே பேசவேண்டாம் என்றார்கள்.
18:27அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
18:28ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
18:29எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
18:30யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
18:31எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும்,
18:32அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும் தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாக நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று எசேக்கியா உங்களுக்குப் போதிக்கும்போது அதைக் கேட்காதிருங்கள்.
18:33மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
18:34ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
18:35யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.
18:36ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
18:37அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகன் யோவாக் என்னும் கணக்காளனும் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
19:1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, யெகோவவுடைய ஆலயத்தில் பிரவேசித்து,
19:2அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான்.
19:3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை.
19:4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
19:5இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏசாயாவிடம் வந்து சொன்னார்கள்.
19:6அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
19:7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
19:8அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான்.
19:9இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி:
19:10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே.
19:11இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?
19:12என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ?
19:13ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான்.
19:14எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து,
19:15யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
19:16யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.
19:17யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
19:18அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள்.
19:19இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான்.
19:20அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்.
19:21அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது: “சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையை அசைக்கிறாள்.
19:22“யாரை அவமதித்து தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?
19:23உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
19:24நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.
19:25நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.
19:26அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.
19:27உன் உட்காருதலையும், போக்கையும், வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
19:28நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”
19:29உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள்.
19:30யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
19:31மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும்.
19:32ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை.
19:33அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
19:34என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
19:35அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள்.
19:36அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
19:37அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.