முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 29 ஏப்ரல்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 16 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 29 ஏப்ரல், 2027
வியாழன் · புனித வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
மகா புனித வியாழன்
பெரிய தவக்காலம்
நோன்பு: எண்ணெயுடன்
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
நற்செய்தி (மணவாளனின் காலை ஜெபம்)
1பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று. 2அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள். 3அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான். 5அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். 6அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். 7பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 8அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். 9அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 10அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், 11அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். 12அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 13அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 14நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள். 15அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். 16தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 20போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார். 21பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. 22தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார். 23அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். 24அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. 25அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். 26உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 27பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். 28மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 30நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். 31பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். 33அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். 34அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். 36அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். 37அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். 38அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். 39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
முதலாம் மணி ஜெபம்
18அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார். 19மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன். 20சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். 21ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்: 22இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள். 23அவர்களில் மீதியாய் இருப்பவர்கள் இல்லை; நான் ஆனதோத்தின் மனிதரை விசாரிக்கும் வருடத்தில் அவர்கள்மேல் ஆபத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12:1யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன? 2நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர். 3யெகோவாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களை அகற்றிப்போட்டு, கொலைசெய்யப்படும் நாளுக்கு அவர்களை நியமியும். 4எதுவரை தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்புக்காக மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லை என்கிறார்கள். 5நீ காலாட்களுடன் ஓடும்போதே உன்னை சோர்வடையச் செய்தார்களானால், குதிரைகளுடன் எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பெருகிவரும்போது நீ என்ன செய்வாய்? 9என் பங்கை பலநிறமான பறவையைப்போல எனக்கானது; ஆகையால், பறவைகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் எல்லா உயிரினங்களே அதை அழிப்பதற்காக கூடிவாருங்கள். 10அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்திரமாக்கினார்கள். 11அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை. 14இதோ, நான் என் மக்களாகிய இஸ்ரவேலுக்குச் சொந்தமாகக் கொடுத்த என் பங்கைத் தொடுகிற கொடியவரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று யெகோவா அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இல்லாமல் பிடுங்கிப்போடுவேன். 15அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிறகு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள்தங்கள் சொந்த இடத்திற்கும் தங்கள்தங்கள் பூமிக்கும் திரும்பச்செய்வேன்.
மாலை ஜெபம்: வாசகம்
10பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, 11மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார். 12மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். 13ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார். 14மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள். 15அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான். 16மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். 17அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். 18யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. 19எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
மாலை ஜெபம்: வாசகம்
1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 3இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்குப் பதில் சொல் 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல். 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல். 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. 8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 9மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 10நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 11இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? 12தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 13உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? 14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். 15துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான கை முறிக்கப்படும். 16நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? 17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 18நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். 19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 23ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். 42:1அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: 2“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 4நீர் நான் சொல்வதைக் கேளும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்வி கேட்பேன், நீர் எனக்கு பதில் சொல்லும். 5என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
மாலை ஜெபம்: வாசகம்
4இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். 8என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். 9இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். 10உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக. 11இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.
நிருபம்
23நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 25போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 26ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 27இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். 28எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும். 29ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான். 30இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். 31நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். 32நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
நற்செய்தி (இணைந்த வாசகம்)
மத் 26:1–20 · யோவா 13:3–17 · மத் 26:21–39 · லூக் 22:43–45 · மத் 26:40–27:2
1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: 2இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து, 4இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள். 5ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். 6இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, 7ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 8அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? 9இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 10இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். 11தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். 12இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. 13இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: 15நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். 16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். 17புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 18அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். 19இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 20மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். 13:3தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, 5பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார். 6அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். 7இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். 8பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். 9அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். 10இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார். 11தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார். 12அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? 13நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். 15நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல. 17நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள். 26:21அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 22அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள். 23அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். 24மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார். 25அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 26அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். 27பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்; 28இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. 29இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 30அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 31அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 32ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார். 33பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான். 34இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள். 36அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 37பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 38அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 39சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். 22:43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். 44அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. 45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: 26:40பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? 41நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 42அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். 43அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். 45பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது. 46என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 47அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். 48அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். 50இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள். 51அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான். 52அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். 53நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 54அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். 55அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. 56ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். 58பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். 59பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; 60ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: 61தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். 62அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். 63இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. 66உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள். 67அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: 68கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 69அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள். 70அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். 71அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். 72அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். 73சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். 74அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. 75அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான். 27:1விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, 2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
நற்செய்தி (பாதங்களைக் கழுவும்போது)
1பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 2சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது; 3தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, 5பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார். 6அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான். 7இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார். 8பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். 9அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். 10இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார். 11தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
நற்செய்தி (பாதங்களைக் கழுவிய பின்)
12அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? 13நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும். 15நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல. 17நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 16 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 29 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்