முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 28 ஏப்ரல்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 15 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 28 ஏப்ரல், 2027
புதன் · புனித வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
மகா புனித புதன்
பெரிய தவக்காலம்
கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
நற்செய்தி (மணவாளனின் காலை ஜெபம்)
17அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள். 18அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். 19அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள். 20பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்தவர்களில் கிரேக்கர்கள் சிலர் இருந்தனர். 21அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். 22பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள். 23அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். 25தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். 26ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன். 28பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது. 29அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது. 31இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 32பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார். 33இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். 34மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். 35அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான். 36ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38“கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. 39ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: 40அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். 41ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். 42ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். 43அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள். 44அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். 45என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். 46என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன். 47ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். 48என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். 49நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். 50அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
ஆறாம் மணி ஜெபம்
3அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள். 4அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல். 5கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள். 7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார். 9அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது. 10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது. 3:1பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார். 2அப்படியே என்னுடைய வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு சாப்பிடக்கொடுத்து: 3மனிதகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன்னுடைய வயிற்றிற்கு உட்கொண்டு, அதினால் உன்னுடைய குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதை சாப்பிட்டேன்; அது என்னுடைய வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது.
மாலை ஜெபம்: வாசகம்
11மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, 12அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். 13அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான். 14அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். 15பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான். 16மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள். 17அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். 18அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான். 19அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். 20அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான். 21மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான். 22அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
மாலை ஜெபம்: வாசகம்
1பின்னொருநாளிலே தேவபுத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றான். 2யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 3அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார். 4சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான். 5ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். 6அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார். 7அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். 8அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான். 9அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள். 10அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை.
நற்செய்தி (முன்பே அர்ச்சிக்கப்பட்ட காணிக்கைகளின் திருவழிபாடு)
6இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, 7ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 8அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? 9இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 10இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். 11தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். 12இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. 13இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: 15நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். 16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 15 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 28 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்