Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 30 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 17 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 30 ஏப்ரல், 2027

வெள்ளி · புனித வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

மகா புனித வெள்ளி

பெரிய தவக்காலம் · கடுமையான நோன்பு

உணவிலிருந்து முழு விலகல்

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

பாடுகளின் முதலாம் நற்செய்தி

யோவா 13:31–18:1

31அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார். 33பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார். 36சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். 37பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். 38இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 14:1உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள். 2என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன். 3நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 4நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். 5தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 6அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார். 8பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 10நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார். 11நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள். 12உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான். 13நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன். 14என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். 15நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். 16நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். 17உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன். 19இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள். 20நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள். 21என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். 22ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான். 23இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். 24என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது. 25நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 26என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார். 27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. 28நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார். 29இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். 30இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. 31நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார். 15:1நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர். 2என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார். 3நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள். 4என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 5நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. 6ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். 7நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 8நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள். 9பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 10நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். 11என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 12நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது. 13ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை. 14நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள். 15இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். 16நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். 17நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். 18உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். 21அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். 25காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது. 26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 27நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள். 16:1நீங்கள் இடறல் அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 2அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும். 3அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். 4அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்; நான் உங்களோடு இருந்ததினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. 5இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. 6ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. 7நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 12இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார். 14அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன். 16நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். 17அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதும் அல்லாமல்: 18கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள். 19அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? 20உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும். 21பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள். 22அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை. 23அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள். 25இவைகளை நான் உவமைகளாக உங்களோடு பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாக உங்களோடு பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். 26அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. 27நீங்கள் என்னை நேசித்தத்தினால், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களை நேசிக்கிறார். 28நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். 29அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: இதோ, இப்பொழுது நீர் உவமையாகப் பேசாமல், வெளிப்படையாக பேசுகிறீர். 30நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். 31இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 32இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார். 33என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார். 17:1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து: 2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 3ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். 5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். 7நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. 10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 12நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன். 14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 16நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை. 17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். 18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். 19அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். 20நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன். 21அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 22நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 24பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன். 25நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 26நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். 18:1இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.

பாடுகளின் இரண்டாம் நற்செய்தி

யோவா 18:1–28

1இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள். 2இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான். 4இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான். 6நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். 7அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. 10அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். 11அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார். 12அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான். 14மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. 15சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான். 16பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். 17அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான். 18குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். 19பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். 20இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். 22இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். 24பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான். 25சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான். 26பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான். 27அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது. 28அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.

பாடுகளின் மூன்றாம் நற்செய்தி

மத் 26:57–75

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். 58பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். 59பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; 60ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: 61தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். 62அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். 63இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. 66உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள். 67அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: 68கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 69அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள். 70அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். 71அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். 72அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். 73சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். 74அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. 75அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.

பாடுகளின் நான்காம் நற்செய்தி

யோவா 18:28–19:16

28அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள். 29ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான். 30அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். 34இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார். 37அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 38அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை. 39பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான். 40அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். 19:1அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். 2படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: 3யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். 4பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். 5இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான். 6பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான். 7யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள். 8பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, 9மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. 10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். 12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். 13பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். 14அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான். 15அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். 16அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.

பாடுகளின் ஐந்தாம் நற்செய்தி

மத் 27:3–32

3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். 5அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். 6பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, 7ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். 8இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. 9இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 12பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 13அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். 15காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. 16அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். 17பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். 20பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 21தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். 23தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். 24கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். 27அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, 29முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, 30அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். 31அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.

பாடுகளின் ஆறாம் நற்செய்தி

மாற் 15:16–32

16அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, 17சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: 18யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 20அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். 21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். 22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், 23வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். 25அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். 26அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். 27இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. 29அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. 30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். 31அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. 32நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.

பாடுகளின் ஏழாம் நற்செய்தி

மத் 27:33–54

33கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, 34கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 37அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். 38அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: 40தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். 41அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: 42மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. 46மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். 49மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

பாடுகளின் எட்டாம் நற்செய்தி

லூக் 23:32–49

32குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 35மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். 36போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: 37நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். 38இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். 40மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. 45சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பாடுகளின் ஒன்பதாம் நற்செய்தி

யோவா 19:25–37

25இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். 27பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான். 28அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார். 29காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 31அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். 33அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. 34ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. 35அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். 36அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

பாடுகளின் பத்தாம் நற்செய்தி

மாற் 15:43–47

43மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான். 45நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான். 46அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான். 47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

பாடுகளின் 11-ஆம் நற்செய்தி

யோவா 19:38–42

38இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான். 39ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான். 40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள். 41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

பாடுகளின் 12-ஆம் நற்செய்தி

மத் 27:62–66

62ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: 63ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. 64ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். 65அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான். 66அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.

முதலாம் மணி ஜெபம்

சகரி 11:10–13

10அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன். 11அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன. 12உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள். 13யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

முதலாம் மணி ஜெபம் (நிருபம்)

கலா 6:14–18

14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். 16இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக. 17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன். 18சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.

முதலாம் மணி ஜெபம் (நற்செய்தி)

மத் 27:1–56

1விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, 2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். 5அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். 6பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, 7ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். 8இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. 9இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 12பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 13அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். 15காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. 16அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். 17பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். 20பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 21தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். 23தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். 24கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். 27அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, 29முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, 30அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். 31அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். 33கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, 34கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 37அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். 38அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: 40தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். 41அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: 42மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. 46மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். 49மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.

மூன்றாம் மணி ஜெபம்

ஏசா 50:4–11

4இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். 8என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். 9இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். 10உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக. 11இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.

மூன்றாம் மணி ஜெபம் (நிருபம்)

ரோமர் 5:6–11

6அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். 7நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். 9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 10நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 11அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.

மூன்றாம் மணி ஜெபம் (நற்செய்தி)

மாற் 15:16–41

16அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, 17சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: 18யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 20அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். 21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். 22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், 23வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். 25அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். 26அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். 27இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. 29அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. 30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். 31அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. 32நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். 33நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. 34மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். 35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 36ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். 37இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். 40சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

ஆறாம் மணி ஜெபம்

ஏசா 52:13–54:1

13இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 14மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 15அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 53:1எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். 7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். 8துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். 9துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். 54:1பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார்.

ஆறாம் மணி ஜெபம் (மற்றொரு வாசகம்)

ஆமோ 8:9–12

9அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி, 10உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 12அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள்.

ஆறாம் மணி ஜெபம் (நிருபம்)

எபி 2:11–18

11எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 12உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; 13நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். 14எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், 15ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். 16எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். 17அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது. 18எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.

ஆறாம் மணி ஜெபம் (நற்செய்தி)

லூக் 23:32–49

32குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 35மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். 36போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: 37நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். 38இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். 40மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. 45சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒன்பதாம் மணி ஜெபம்

எரே 11:18–12:5, 9–11, 14–15

18அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார். 19மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன். 20சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். 21ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்: 22இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள். 23அவர்களில் மீதியாய் இருப்பவர்கள் இல்லை; நான் ஆனதோத்தின் மனிதரை விசாரிக்கும் வருடத்தில் அவர்கள்மேல் ஆபத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12:1யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன? 2நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர். 3யெகோவாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களை அகற்றிப்போட்டு, கொலைசெய்யப்படும் நாளுக்கு அவர்களை நியமியும். 4எதுவரை தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்புக்காக மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லை என்கிறார்கள். 5நீ காலாட்களுடன் ஓடும்போதே உன்னை சோர்வடையச் செய்தார்களானால், குதிரைகளுடன் எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பெருகிவரும்போது நீ என்ன செய்வாய்? 9என் பங்கை பலநிறமான பறவையைப்போல எனக்கானது; ஆகையால், பறவைகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் எல்லா உயிரினங்களே அதை அழிப்பதற்காக கூடிவாருங்கள். 10அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்திரமாக்கினார்கள். 11அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை. 14இதோ, நான் என் மக்களாகிய இஸ்ரவேலுக்குச் சொந்தமாகக் கொடுத்த என் பங்கைத் தொடுகிற கொடியவரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று யெகோவா அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இல்லாமல் பிடுங்கிப்போடுவேன். 15அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிறகு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள்தங்கள் சொந்த இடத்திற்கும் தங்கள்தங்கள் பூமிக்கும் திரும்பச்செய்வேன்.

ஒன்பதாம் மணி ஜெபம் (நிருபம்)

எபி 10:19–31

19ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால், 20அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும், 21தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும், 22தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 23அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே. 24மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து; 25சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும். 26சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், 27நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். 28மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 30பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம். 31ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.

ஒன்பதாம் மணி ஜெபம் (நற்செய்தி)

யோவா 18:28–19:37

28அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள். 29ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான். 30அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். 34இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார். 37அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 38அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை. 39பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான். 40அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். 19:1அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். 2படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: 3யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். 4பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். 5இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான். 6பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான். 7யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள். 8பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, 9மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. 10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். 12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். 13பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். 14அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான். 15அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். 16அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 17அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். 19பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது. 21அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான். 23படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது. 24அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள். 25இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். 27பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான். 28அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார். 29காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 31அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். 33அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. 34ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. 35அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். 36அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

மாலை ஜெபம்: வாசகம்

யாத் 33:11–23

11ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான். 12மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; 13உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். 14அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். 15அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். 16எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான். 17அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். 18அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். 19அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, 20நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். 21பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; 23பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.

மாலை ஜெபம்: வாசகம்

யோபு 42:12–17

12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது. 13ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள். 14மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான். 15தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான். 16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். 17யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான்.

மாலை ஜெபம்: வாசகம்

ஏசா 52:13–54:1

13இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 14மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 15அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 53:1எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். 7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். 8துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். 9துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். 54:1பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார்.

நிருபம் (மாலை ஜெபத்தில்)

1 கொரி 1:18–2:2

18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 19அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது. 20ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? 21எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. 22யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; 23நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். 24ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். 25இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. 26எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. 27ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். 29மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 2:1சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

நற்செய்தி (இணைந்த வாசகம்)

மத் 27:1–38 · லூக் 23:39–43 · மத் 27:39–54 · யோவா 19:31–37 · மத் 27:55–61

1விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, 2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். 5அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். 6பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, 7ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். 8இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. 9இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 12பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 13அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். 15காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. 16அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். 17பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். 20பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 21தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். 23தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். 24கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். 27அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, 29முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, 30அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். 31அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். 33கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, 34கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 37அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். 38அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 23:39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். 40மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 27:39அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: 40தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். 41அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: 42மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. 46மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். 49மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 19:31அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். 33அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. 34ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. 35அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். 36அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 27:55மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள். 57மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, 58பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். 61அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 17 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 30 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்