முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 21 மார்ச்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 21 மார்ச், 2027
ஞாயிறு · புனித வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
குருத்தோலை ஞாயிறு — கர்த்தரின் பாடுகள்
ஞாயிறு · திருவழிபாட்டு நிறம்: சிவப்பு
அன்றைய வாசகங்கள்
பவனியின் நற்செய்தி
அல்லது: யோவா 12:12–16
1இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: 2உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். 3ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள். 5அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள். 6இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். 7அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். 8அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். 9முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்; 10கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
முதல் வாசகம்
4இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
பதிலுரைப் பாடல்
7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: 8யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள். 16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். 17என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். 19ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். 22உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 23யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
இரண்டாம் வாசகம்
6அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல், 7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார். 8அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 9ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், 11பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
நற்செய்தி
1இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். 2ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். 3அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். 4அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? 5இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். 6இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 7ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். 8இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். 9இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். 11அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். 12பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 13அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்; 14அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 16அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 17மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார். 18அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். 20அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; 21மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார். 22அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். 23பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. 25நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 26அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 27அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள். 28ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார். 29அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான். 30இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 31அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள். 32பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 33பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். 34அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, 35சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: 36அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். 37பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். 39அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். 40அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். 41அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். 42என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார். 43உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். 44அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 45அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். 46அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 47அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். 48இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; 49நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். 50அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 51ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். 52அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான். 53இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள். 54பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். 55அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. 56அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. 57அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, 58அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். 59அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை. 60அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 61அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 62அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். 63பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? 64தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள். 65அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். 66அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, 67குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். 68அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. 69வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். 72உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான். 15:1அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள். 2பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 3பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. 4அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 5இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். 6பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது. 7கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். 8மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள். 9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து. 10அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான். 11பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 12பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். 13அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள். 14அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். 15அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். 16அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, 17சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: 18யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 20அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். 21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். 22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், 23வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். 25அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். 26அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். 27இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. 29அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. 30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். 31அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. 32நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். 33நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. 34மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். 35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 36ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். 37இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். 40சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள். 42ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில். 43மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான். 45நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான். 46அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான். 47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்