முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › செப்டம்பர் 2027 › 26 செப்டம்பர்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · செப்டம்பர் 13 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 26 செப்டம்பர், 2027
ஞாயிறு · தொனி 5
பண்டிகைகளும் புனிதர்களும்
பெந்தெகொஸ்தேக்குப் பின் 14-ஆம் ஞாயிறு
சிலுவை உயர்த்துதலுக்கு முந்தைய ஞாயிறு
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
மாலை ஜெபம்: வாசகம்
22பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து: 23இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர். 27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும். 29உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 30உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
மாலை ஜெபம்: வாசகம்
19யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். 20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது. 21என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். 22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது. 24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். 25திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். 26யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். 27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. 28உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. 29பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. 30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே. 31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 33துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். 34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
மாலை ஜெபம்: வாசகம்
1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, 3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். 5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 6பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். 9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான். 10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. 11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
காலை ஜெபத்தின் மூன்றாம் நற்செய்தி
9வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார். 10அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள். 11அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை. 12அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார். 13அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. 14அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 15பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். 16விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான். 17விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; 18சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார். 19இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 20சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
நிருபம் (சிலுவை உயர்த்துதலுக்கு முந்தைய ஞாயிறுக்காக)
11என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள். 12சரீரத்தின்படி நல்லவர்களைப்போலக் காணப்படவிரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார்கள். 13விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள். 14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். 16இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக. 17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன். 18சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
நிருபம்
21உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 22அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார். 23மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன். 24உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம். 2:1நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன். 2நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? 3என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன். 4அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.
நிருபம் (திருக்கல்லறை ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காக)
1இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; 2மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். 3வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார். 4ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
நற்செய்தி (சிலுவை உயர்த்துதலுக்கு முந்தைய ஞாயிறுக்காக)
13பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை. 14பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும், 15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். 16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். 17உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
நற்செய்தி
1இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. 3அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். 4அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். 5அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள். 6மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். 7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். 8அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள். 9ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். 10அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. 11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: 12நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 14அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
நற்செய்தி (திருக்கல்லறை ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காக)
13பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 13 செப்டம்பர் சிவில் நாள்காட்டியின் 26 செப்டம்பர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்