Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஆகஸ்ட் 2027 › 19 ஆகஸ்ட்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஆகஸ்ட் 6 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 19 ஆகஸ்ட், 2027

வியாழன் · பெந்தெகொஸ்தேக்குப் பின் ஒன்பதாம் வாரம் · தொனி 7

பண்டிகைகளும் புனிதர்களும்

The Holy Transfiguration of Our Lord God and Saviour Jesus Christ

மரியாளின் துயில் நோன்பு

மீன் அனுமதி

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம்

யாத் 24:12–18

12அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார். 13அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது, 14அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான். 15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது. 16யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17மலையின் உச்சியிலே யெகோவாவுடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. 18மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.

மாலை ஜெபம்: வாசகம்

யாத் 33:11–23; 34:4–6, 8

11ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான். 12மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; 13உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். 14அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். 15அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். 16எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான். 17அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். 18அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். 19அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, 20நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். 21பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; 23பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார். 34:4அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். 5யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். 6யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். 8மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:

மாலை ஜெபம்: வாசகம்

1 இராஜா 19:3–9, 11–13, 15–16

3அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். 4அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி, 5ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான். 6அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான். 7யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான். 8அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான். 9அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார். 11அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. 12பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது. 13அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது. 15அப்பொழுது யெகோவா அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, 16பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய்.

காலை ஜெபம்: நற்செய்தி

லூக் 9:28–36

28இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். 29அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. 30அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள், 31அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள். 33அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான். 34இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள். 35அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 36அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.

நிருபம் (கர்த்தரின் மறுரூபத்திற்காக)

2 பேது 1:10–19

10ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. 11இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். 12இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். 13நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, 14நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். 15மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன். 16நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 17இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, 18அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். 19அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.

நற்செய்தி (கர்த்தரின் மறுரூபத்திற்காக)

மத் 17:1–9

1ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய், 2அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது. 3அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 6சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார். 8அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 6 ஆகஸ்ட் சிவில் நாள்காட்டியின் 19 ஆகஸ்ட் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்