Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஆகஸ்ட் 2027 › 18 ஆகஸ்ட்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஆகஸ்ட் 5 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 18 ஆகஸ்ட், 2027

புதன் · பெந்தெகொஸ்தேக்குப் பின் ஒன்பதாம் வாரம் · தொனி 7

பண்டிகைகளும் புனிதர்களும்

Forefeast of the Transfiguration of the Lord

மரியாளின் துயில் நோன்பு

கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம்

1 கொரி 13:4–14:5

4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, 5அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, 6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். 8அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும். 9நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. 10நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும். 11நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன். 12இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். 13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 14:1அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள். 2ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 3தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 4அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான். 5நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன்.

நிருபம் (வியாழக்கிழமைக்காக)

1 கொரி 14:6–19

6மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன? 7அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்? 8அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்? 9அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே. 10உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. 11ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான். 12நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்; 13அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும். 14எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும். 15இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 16இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. 17நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே. 18உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 19அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.

நற்செய்தி

மத் 20:1–16

1பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான். 3காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: 4நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். 6ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். 10முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். 11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து: 12பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா? 14உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். 15என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான். 16இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

நற்செய்தி (வியாழக்கிழமைக்காக)

மத் 20:17–28

17இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து: 18இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, 19அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். 20அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள். 21அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். 22இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். 23அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 24மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள். 25அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். 27உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். 28அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 5 ஆகஸ்ட் சிவில் நாள்காட்டியின் 18 ஆகஸ்ட் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்