முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 27 மார்ச்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 27 மார்ச், 2027
சனி · பாஸ்கா மூவொரு நாட்கள்
பண்டிகைகளும் புனிதர்களும்
புனித சனி — பாஸ்கா திருவிழிப்பு
பாஸ்கா மூவொரு நாட்கள் · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை
அன்றைய வாசகங்கள்
முதலாம் வாசகம்
1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். 2பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. 4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. 6பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். 7தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. 8தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. 9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. 10தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 12பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது. 14பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார். 15“அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது. 20பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். 21தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். 23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. 24பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 25தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 26பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். 27தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார். 28பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். 29பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; 30பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது. 31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது. 2:1இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே. 2தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
சங்கீதம்
சங் 104:1–2, 5–6, 10, 12–14, 24, 35
1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 5பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். 6அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது. 10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. 12அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும். 13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது. 14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 35பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, அல்லேலூயா.
இரண்டாம் வாசகம்
1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். 2அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். 3ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். 4மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். 5அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: “நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம்” என்றான். 6ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள். 7அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”. 8அதற்கு ஆபிரகாம்: “என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார்” என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய், 9தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான். 10பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். 11அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். 12அப்பொழுது அவர்: “சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரே மகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்” என்றார். 13ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, தனக்குப் பின்புறமாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 14ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 15யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16“நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; 17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், 18நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
சங்கீதம்
5யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். 8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 9ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். 10என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. 11வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
மூன்றாம் வாசகம்
15அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. 16நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். 17எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். 19அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. 20அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 21மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. 22இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். 24காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, 25அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். 26யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். 27அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். 28தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 30இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். 31யெகோவா எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள். 15:1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
சங்கீதம்
1அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். 2யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; 3யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம். 4பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். 5ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். 6யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. 17நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். 18யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
நான்காம் வாசகம்
5உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 6கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார். 7இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். 8அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார். 9இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். 10மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார். 11சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, 12உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன். 13உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். 14நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
சங்கீதம்
1ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். 3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 4யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவரைப் புகழ்ந்துபாடி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். 5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; மாலையில் அழுகை வரும், அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 10யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். 11என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 12என் தேவனாகிய யெகோவாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
ஐந்தாம் வாசகம்
1ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். 2நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். 3உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். 5இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; 6யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். 8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். 9பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 10மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
சங்கீதம்
2இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
ஆறாம் வாசகம்
இந்த மொழிபெயர்ப்பில் இல்லை
சங்கீதம்
7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. 8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. 9யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. 10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
ஏழாம் வாசகம்
16பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த தேசத்திலே குடியிருக்கும்போது அதைத் தங்களுடைய நடக்கையினாலும் தங்களுடைய செயல்களினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என்னுடைய முகத்திற்கு முன்பாக மாதவிடாயுள்ள பெண்ணின் தீட்டைப்போல் இருந்தது. 18ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்திற்காக, அதை அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளால் தீட்டுப்படுத்தினதிற்காக நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, 19அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன். 20அவர்கள் அந்நியதேசங்களிடத்தில் போனபோது அந்த மக்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் யெகோவாவுடைய மக்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என்னுடைய பரிசுத்தபெயரைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். 21ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே இரங்குகிறேன். 22ஆதலால், நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களை, உங்களுக்காக அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே நான் இப்படிச் செய்கிறேன். 23அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 24நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். 25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். 26உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன். 28உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து,
சங்கீதம்
2என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 4முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 43:3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும். 4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
நிருபம்
3கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? 4மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். 5ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. 10அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
சங்கீதம்
1யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. 2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. 16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 17நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன். 22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது. 23அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நற்செய்தி
1ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு. 2வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து, 3கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 4அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள். 5அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள். 6அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். 7நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்