Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 26 மார்ச்

கத்தோலிக்க நாள்காட்டி

தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 26 மார்ச், 2027

வெள்ளி · பாஸ்கா மூவொரு நாட்கள்

பண்டிகைகளும் புனிதர்களும்

புனித வெள்ளி

பாஸ்கா மூவொரு நாட்கள் · திருவழிபாட்டு நிறம்: சிவப்பு

நோன்பும் தவமும்

நோன்பும் இறைச்சி விலக்கும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவ நாள்; அது எப்படிக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆயர் பேரவையும் தீர்மானிக்கிறது: இறைச்சியைத் தவிர்த்தல் அல்லது வேறொரு தவச் செயல். நோன்பு 18 முதல் 59 வயது வரை கடமை, இறைச்சி விலக்கு 14 வயதிலிருந்து.

அன்றைய வாசகங்கள்

முதல் வாசகம்

ஏசா 52:13–53:12

13இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 14மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 15அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 53:1எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். 7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். 8துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். 9துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

பதிலுரைப் பாடல்

சங் 31:1, 5, 11–12, 14–16, 24

1இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். 11என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். 12செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன். 14நானோ, யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். 15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். 16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, உமது கிருபையினாலே என்னை இரட்சியும். 24யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.

இரண்டாம் வாசகம்

எபி 4:14–16; 5:7–9

14வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம். 15நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். 16எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம். 5:7அவர் சரீரத்தில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு, 8அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

நற்செய்தி

யோவா 18:1–19:42

1இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள். 2இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான். 4இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான். 6நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். 7அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. 10அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். 11அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார். 12அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான். 14மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. 15சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான். 16பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். 17அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான். 18குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். 19பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். 20இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். 22இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். 24பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான். 25சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான். 26பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான். 27அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது. 28அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள். 29ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான். 30அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். 34இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார். 37அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 38அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை. 39பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான். 40அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். 19:1அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். 2படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: 3யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். 4பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். 5இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான். 6பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான். 7யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள். 8பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, 9மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. 10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். 12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். 13பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். 14அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான். 15அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். 16அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 17அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். 19பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது. 21அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான். 23படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது. 24அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள். 25இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். 27பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான். 28அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார். 29காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 31அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். 33அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. 34ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. 35அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். 36அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 38இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான். 39ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான். 40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள். 41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்