24:18சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோருவருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள்.
24:19யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
24:20எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.
25:1அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான்.
25:2அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
25:3அதே வருடத்தில் நான்காம் மாதம் ஒன்பதாம்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு உணவு இல்லாமல்போனது; நகரத்தின் மதிலில் உடைப்பு ஏற்பட்டது.
25:4அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
25:5கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது.
25:6அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
25:7சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
25:8ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருட ஆட்சியிலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எருசலேமுக்கு வந்து,
25:9யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.
25:10மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.
25:11நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
25:12தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சைத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான்.
25:13யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
25:14செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
25:15சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான்.
25:16சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்துக்காக உண்டாக்கிய இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்தின் எடைக்கு கணக்கில்லை.
25:17ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது.
25:18மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.
25:19நகரத்திலே அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய அதிகாரி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் பிடிபட்ட ஐந்துபேரையும், தேசத்தின் மக்களைப் படையில் சேர்க்கிற படைத்தலைவனின் தலைமைச் செயலாளனையும், நகரத்தில் பிடிப்பட்ட பொதுமக்களில் அறுபதுபேரையும் பிடித்தான்.
25:20அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.
25:21அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதாமக்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.