1யெகோவா ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது,
2ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.
3அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; யெகோவா உம்மோடு இருக்கிறாரே என்றான்.
4அன்று இரவிலே யெகோவாவுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
5நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
6நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன்.
7நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
8இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
9நீ போன எந்த இடத்திலும் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
10நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்புபோலவும், நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நியமித்தேன்.
11உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் யெகோவா உனக்கு வீட்டை உண்டாக்குவார் என்பதைக் யெகோவா உனக்கு அறிவிக்கிறார்.
12உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
13அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
14நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன்.
15உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
16உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
17நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.