Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › நற்செய்தி நூல்கள் அருகருகே › தொடக்கம்

நற்செய்தி நூல்கள் அருகருகே · தொடக்கம்

யோவான்ஸ்நானன் பிரசங்கிக்கிறான்

மத் 3:1–12 · மாற் 1:1–8 · லூக் 3:1–18 · யோவா 1:19–28

மத்தேயு

மத் 3:1–12

1அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:

2“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.

3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

4இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.

5அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,

6தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

7பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?

8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

9ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.

11மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

12தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

மாற்கு

மாற் 1:1–8

1தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.

2“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;

3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;

4யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.

5அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

6யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.

7அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.

8நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.

லூக்கா

லூக் 3:1–18

1திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,

2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.

3அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,

4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,

5மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,

6அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?

8மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.

10அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

11அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.

12வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.

13அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

14போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.

15யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,

16யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

17தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

யோவான்

யோவா 1:19–28

19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,

20அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.

21அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.

22அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.

23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.

24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.

25அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.

26யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.

27அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.

28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்