Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 19 ஜூன்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜூன் 6 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 19 ஜூன், 2027

சனி · பாஸ்காவின் ஏழாம் வாரம் · தொனி 6

பண்டிகைகளும் புனிதர்களும்

மரித்தோர் நினைவு சனி

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம் (மரித்தோருக்காக)

1 தெச 4:13–17

13அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை. 14இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார். 15கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.

நிருபம்

அப் 28:1–31

1நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம். 2அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். 3பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. 4விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 5அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். 6அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள். 7தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான். 8புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான். 9இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள். 10அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். 11மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு, 12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். 13அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து, 14அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம். 15அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள். 16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். 17மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். 18அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். 19யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. 20இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். 21அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. 22எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். 23அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான். 24அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள். 25இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது: 26நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள். 27இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார். 28ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். 29இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். 30பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு, 31மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

நிருபம் (மரித்தோருக்காக (மற்றொரு வாசகம்))

1 கொரி 15:47–57

47முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 48மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 49மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். 50சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. 51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம். 52எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும். 54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 55மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 56மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். 57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

நற்செய்தி (மரித்தோருக்காக)

யோவா 5:24–30

24என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 26ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். 27அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; 29அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 30நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது.

நற்செய்தி

யோவா 21:15–25

15அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார். 20பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான். 21அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார். 24அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம். 25இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

நற்செய்தி (மரித்தோருக்காக (மற்றொரு வாசகம்))

யோவா 6:35–39

35இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான். 36நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை. 38என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன். 39அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 6 ஜூன் சிவில் நாள்காட்டியின் 19 ஜூன் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்