முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 7 ஏப்ரல்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மார்ச் 25 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 7 ஏப்ரல், 2027
புதன் · பெரிய தவக்காலத்தின் நான்காம் வாரம் · தொனி 3
பண்டிகைகளும் புனிதர்களும்
The Annunciation of our Most Holy Lady, Theotokos and Ever-Virgin Mary
பெரிய தவக்காலம்
மீன் அனுமதி
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
காலை ஜெபம்: நற்செய்தி (மங்கள வார்த்தை விழாவுக்காக)
39அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், 40சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். 41எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, 42அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! 44இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. 45விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். 46அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. 47என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 48தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள். 49வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது. 56மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
ஆறாம் மணி ஜெபம்
21இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும். 27:1அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். 2அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். 3யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். 4கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்; 5இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான். 6யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். 7அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ? 8தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார். 9ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
மாலை ஜெபம்: வாசகம்
18கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். 19இம்மூவரும் நோவாவின் மகன்கள்; இவர்களாலே பூமியெங்கும் மக்கள் பெருகினார்கள். 20நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். 21அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான். 22அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான். 23அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்துத் தங்களுடைய தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, பின்முகமாக வந்து, தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாகப் போகாததால், தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்கவில்லை. 24நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து: 25“கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். 26“சேமுடைய தேவனாகிய யெகோவாவிற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான். 27யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். 28வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான். 29நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். 10:1நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
மாலை ஜெபம்: வாசகம்
23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. 13:1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். 6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 7ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. 8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். 9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
மாலை ஜெபம்: வாசகம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)
1மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான். 2அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. 3அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். 4அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். 5அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். 6பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். 7அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 8அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
மாலை ஜெபம்: வாசகம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)
22யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். 23பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். 24ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். 25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன். 27அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், 28உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், 29சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், 30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
நிருபம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)
11எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 12உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; 13நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். 14எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், 15ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். 16எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். 17அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது. 18எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.
நற்செய்தி (மங்கள வார்த்தை விழாவுக்காக)
24அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து, 25எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள். 26எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், 27தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். 28அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 29அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். 30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். 31இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். 34அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். 35தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். 36இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். 38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 25 மார்ச் சிவில் நாள்காட்டியின் 7 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்