Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 6 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மார்ச் 24 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 6 ஏப்ரல், 2027

செவ்வாய் · பெரிய தவக்காலத்தின் நான்காம் வாரம் · தொனி 3

பண்டிகைகளும் புனிதர்களும்

Forefeast of the Annunciation

பெரிய தவக்காலம்

கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

ஆறாம் மணி ஜெபம்

ஏசா 25:1–9

1யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். 2நீர் எங்களுடைய எதிரியின் நகரத்தை மண்மேடும், பாதுகாப்பான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் தலைநகரை நகரமாக இராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். 3ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும். 4கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். 5வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். 6சேனைகளின் யெகோவா இந்த மலையிலே சகல மக்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சைரசமும், இறைச்சியும் கொழுப்புமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சைரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். 7சகல மக்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். 8அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார். 9அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

மாலை ஜெபம்: வாசகம்

ஆதி 9:8–17

8பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: 9“நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், 10உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 11இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். 12மேலும் தேவன்: “எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலை முறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: 13நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். 14நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். 15அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். 16அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன். 17இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம்” என்று நோவாவிடம் சொன்னார்.

மாலை ஜெபம்: வாசகம்

நீதி 12:8–22

8தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 9உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 12துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 20தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். 22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

மாலை ஜெபம்: வாசகம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)

ஆதி 28:10–17

10யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து, 11ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான். 12அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள். 13அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார். 16யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான். 17அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான்.

மாலை ஜெபம்: வாசகம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)

எசேக் 43:27–44:4

27அந்த நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்களுடைய தகனபலிகளையும் உங்களுடைய நன்றிபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 44:1பின்பு அவர் என்னை கிழக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிவாசல் வழியே திரும்பச்செய்தார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் நுழைவதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதற்குள் நுழைந்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3இது அதிபதிக்கே உரியது, அதிபதி யெகோவாவுடைய சந்நிதியில் உணவு உண்பதற்காக இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, மறுபடியும் அதின் வழியாகப் புறப்படுவான் என்றார். 4பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாக ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, யெகோவாவுடைய ஆலயம் யெகோவாவுடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

மாலை ஜெபம்: வாசகம் (மங்கள வார்த்தை விழாவுக்காக)

நீதி 9:1–11

1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, 3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். 5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 6பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். 9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான். 10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. 11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 24 மார்ச் சிவில் நாள்காட்டியின் 6 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்