Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 8 மார்ச்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · பிப்ரவரி 23 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 8 மார்ச், 2027

திங்கள் · பாலாடைக்கட்டி வாரம் · தொனி 7

பண்டிகைகளும் புனிதர்களும்

பாலாடைக்கட்டி வாரத்தின் திங்கள்

பாலாடைக்கட்டி வாரம்

இறைச்சி இல்லை; பால், முட்டை, மீன் அனுமதி

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம்

3 யோவா 1:1–15

1மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது: 2பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன். 3சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன். 4என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 5பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய். 6அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும். 7ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். 8ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 9நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 10ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான். 11பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை. 12தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள். 13எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை. 14சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். 15உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.

நற்செய்தி

லூக் 19:29–40; 22:7–39

29அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: 30உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். 31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். 32அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள். 33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். 34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, 35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். 36அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள். 37அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு, 38கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள். 39அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள். 40அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 22:7பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 8அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். 9அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 10அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், 11அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். 12அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 13அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 14நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள். 15அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். 16தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 20போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார். 21பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. 22தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார். 23அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். 24அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. 25அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். 26உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 27பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். 28மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 30நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். 31பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். 33அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். 34அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். 36அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். 37அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். 38அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். 39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 23 பிப்ரவரி சிவில் நாள்காட்டியின் 8 மார்ச் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்