முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 9 மார்ச்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · பிப்ரவரி 24 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 9 மார்ச், 2027
செவ்வாய் · பாலாடைக்கட்டி வாரம் · தொனி 7
பண்டிகைகளும் புனிதர்களும்
பாலாடைக்கட்டி வாரத்தின் செவ்வாய்
பாலாடைக்கட்டி வாரம்
இறைச்சி இல்லை; பால், முட்டை, மீன் அனுமதி
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
மாலை ஜெபம்: வாசகம் (முன்னோடிக்காக)
இந்த மொழிபெயர்ப்பில் இல்லை
காலை ஜெபம்: நற்செய்தி (முன்னோடிக்காக)
17இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது. 18இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து, 19நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள். 21அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார். 22இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. 23என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 24யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ? 25இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான். 28பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 29யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். 30ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
நிருபம்
1இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 2உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும். 3பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது. 4ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது. 5நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார். 6தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். 7அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். 8அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள். 9பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். 10இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
நிருபம் (முன்னோடிக்காக)
6இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார். 7இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; 9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. 10கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது. 13விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம். 14கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
நற்செய்தி
39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள். 40அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, 41அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 42பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். 45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: 46நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார். 47அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான். 48இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். 49அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். 50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். 51அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார். 52பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. 53நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார். 54அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான். 55அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். 56அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள். 57அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான். 58சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான். 59ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். 60அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது. 61அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து, 62வெளியேபோய், மனங்கசந்து அழுதான். 63இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து, 64அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, 65மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள். 66விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: 67நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். 68நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள். 69இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார். 70அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 71அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். 23:1அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
நற்செய்தி (முன்னோடிக்காக)
2அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: 3வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; 5குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. 6என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 7அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். 9இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான். 11பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன். 12யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். 15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 24 பிப்ரவரி சிவில் நாள்காட்டியின் 9 மார்ச் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்