Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே › எசேக்கியா முதல் யோசியா வரை

இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே · எசேக்கியா முதல் யோசியா வரை

யூதாவின் ராஜாவாகிய மனாசே

2 இராஜா 21:1–18 · 2 நாளா 33:1–20

2 இராஜாக்கள்

2 இராஜா 21:1–18

1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள்.

2யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

3தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான்.

4எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

5யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,

6தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.

7இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.

8நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார்.

9ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.

10ஆகையால் யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது:

11யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால்,

12இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து,

13எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

14அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

15தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார்.

16யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.

17மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

18மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான்.

2 நாளாகமம்

2 நாளா 33:1–20

1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.

2யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

3அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி,

4எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,

5யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

6அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

7இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும்,

8நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான்.

9அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான்.

10யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.

11ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

12இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான்.

13அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

14பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி,

15யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து,

16யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

17ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.

18மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

19அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

20மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்