Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே › சாலொமோன்

இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே · சாலொமோன்

கட்டுவதற்குச் சாலொமோனும் ஈராமும் ஆயத்தம் செய்கிறார்கள்

1 இராஜா 5:1–12 · 2 நாளா 2:1–16

1 இராஜாக்கள்

1 இராஜா 5:1–12

1சாலொமோனை அவனுடைய தகப்பன் இடத்தில் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன்னுடைய வேலைக்காரர்களை அவனிடம் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்கு எப்பொழுதும் நண்பனாக இருந்தான்.

2அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி:

3என்னுடைய தகப்பனாகிய தாவீதின் எதிரிகளைக் யெகோவா அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரை, அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவரால் முடியாமலிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.

4ஆனாலும் இப்பொழுதோ என்னுடைய தேவனாகிய யெகோவா எனக்கு எங்கும் இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.

5ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.

6ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுரு மரங்களை வெட்ட கட்டளை கொடும்; சீதோனியர்களைப்போல மரம்வெட்டும் வேலை தெரிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரர்களின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.

7ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான மக்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள மகனைக் கொடுத்த யெகோவா இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;

8ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.

9என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கி மத்திய தரைக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

10அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.

11சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக 20,000 கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான்.

12யெகோவா சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

2 நாளாகமம்

2 நாளா 2:1–16

1சாலொமோன் யெகோவாவுடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத் தீர்மானம் செய்து,

2சுமைசுமக்கிறதற்கு எழுபதாயிரம் ஆண்களையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதாயிரம் ஆண்களையும், இவர்கள்மேல் தலைவர்களாக மூவாயிரத்து அறுநூறு ஆண்களையும் கணக்கிட்டு ஏற்படுத்தினான்.

3தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.

4இதோ, என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்து அப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டை செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்.

5எங்கள் தேவன் அனைத்து தெய்வங்களையும்விட பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.

6வானங்களும், வானாதிவானங்களும், அவருக்குப் போதாமலிருக்கும்போது அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே அல்லாமல், வேறு காரணத்திற்காக அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

7இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணர்களோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்வதில் நிபுணனும், கொத்துவேலை செய்யத்தெரிந்த ஒரு மனிதனை என்னிடத்திற்கு அனுப்பும்.

8லீபனோனிலிருந்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர்கள் பழகினவர்களென்று எனக்குத் தெரியும்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்.

9நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

10அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரர்களுக்கு இருபதாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம் திராட்சைரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

11அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு மறுமொழியாக: யெகோவா தம்முடைய மக்களை சிநேகித்ததால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.

12யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும், தமது அரசாட்சிக்கு ஒரு அரண்மனையையும் கட்டத்தக்க கூரிய அறிவும், புத்தியுமுடைய ஞானமுள்ள மகனை, தாவீது ராஜாவுக்குக் கொடுத்தவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

13இப்போதும் ஈராம் அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.

14அவன் தாணின் மகள்களில் ஒரு பெண்ணின் மகன்; அவனுடைய தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீல நூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணர்களோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணர்களோடும் ஆலோசித்துச் செய்யவும் அறிந்தவன்.

15என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சைரசத்தையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அனுப்புவாராக.

16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்