Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே › சாலொமோன்

இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே · சாலொமோன்

கிபியோனில் சாலொமோன் ஞானத்தைக் கேட்கிறான்

1 இராஜா 3:4–15 · 2 நாளா 1:2–13

1 இராஜாக்கள்

1 இராஜா 3:4–15

4அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாக இருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

5கிபியோனிலே யெகோவா சாலொமோனுக்கு இரவில் கனவில் தரிசனமாகி: நீ விரும்புவதை என்னிடம் கேள் என்று தேவன் சொன்னார்.

6அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.

7இப்போதும் என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன்.

8நீர் தெரிந்துகொண்டதும் மிகுதியான எண்ணிக்கைக்கு அடங்காததும் கணக்கில் சேராததுமான திரளான மக்களாகிய உமது மக்களின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

9ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

10சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது.

11ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால்,

12உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை.

13இதுவுமில்லாமல், நீ கேட்காத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்னுடைய நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்கு இணையானவன் இருப்பதில்லை.

14உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.

15சாலொமோனுக்கு தூக்கம் தெளிந்தபோது, அது கனவு என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளை செலுத்தி, சமாதானபலிகளைச் செலுத்தி, தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்தளித்தான்.

2 நாளாகமம்

2 நாளா 1:2–13

2சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி,

3அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

4தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.

5ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

6அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.

7அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.

8சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.

9இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.

10இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.

11அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும்,

12ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

13இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்