முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › டிசம்பர் 2026 › 27 டிசம்பர்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 27 டிசம்பர், 2026
ஞாயிறு · கிறிஸ்து பிறப்புக் காலம்
பண்டிகைகளும் புனிதர்களும்
திருக்குடும்பம்: இயேசு, மரியாள், யோசேப்பு
விழா · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார். 2அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான். 3பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான். 4அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி, 5அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார். 6அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார். 21:1யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 3அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.
பதிலுரைப் பாடல்
1யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 2அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 3அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 4யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். 5அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! 6அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 8ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், 9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
இரண்டாம் வாசகம்
8விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். 11விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள். 12எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள். 17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து, 19தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
நற்செய்தி
22மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு, 23முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும், 24கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள். 25அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார். 26கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது. 27சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, 28சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: 29“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; 30யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 31தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி, 32அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான். 33இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். 34பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 35முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான். 36ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். 37எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். 38அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள். 39கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள். 40அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
இன்றைய புனிதர்கள்
- புனித யோவான், அப்போஸ்தலர், நற்செய்தியாளர்
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்