Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே › சாலொமோன்

இராஜாக்களும் நாளாகமமும் அருகருகே · சாலொமோன்

ஆலயப் பிரதிஷ்டையில் சாலொமோனின் ஜெபம்

1 இராஜா 8:22–53 · 2 நாளா 6:12–42

1 இராஜாக்கள்

1 இராஜா 8:22–53

22பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து:

23இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.

24தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.

25இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன்னுடைய மகன்களும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

26இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக.

27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

28என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.

29உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

30உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

31ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,

32அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக.

33உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,

34பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுடைய முன்னோர்களுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக.

35அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் வானம் அடைபட்டு மழைபெய்யாமல் இருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தங்களை தேவரீர் மனவருத்தப்படுத்தும்போது தங்களுடைய பாவங்களைவிட்டுத் திரும்பினால்.

36பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியார்களும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.

37தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும்,

38உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும்,

39நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

40தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

41உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.

42அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால்,

43உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.

44நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால்,

45பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக.

46பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது,

47அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,

48தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,

49நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து,

50உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக.

51அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே.

52அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.

53கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.

2 நாளாகமம்

2 நாளா 6:12–42

12யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான்.

13சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லோருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:

14இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

15தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

16இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் மகன்களும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

17இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை உண்மையென்று விளங்குவதாக.

18தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

19என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் உமது மனதில் கொண்டருளும்.

20உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

21உமது அடியேனும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

22ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,

23அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரச்செய்து, அவனுக்கு நீதியை சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாகச் செய்து அவனை நீதிமானாக்கவும், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.

24உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் எதிரிக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,

25பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக.

26அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தேவரீர் தங்களைத் துக்கப்படுத்தும்போது தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,

27பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.

28தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றுகை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,

29எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

30உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

31தேவரீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக.

32உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் மக்களல்லாத அந்நிய மக்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக நின்று விண்ணப்பம்செய்தால்,

33உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக்கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்கு பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் சூட்டப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய மனிதன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.

34நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு போர்செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்செய்தால்,

35பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.

36பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கும்போது,

37அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,

38தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்செய்தால்,

39உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாகப் பாவம்செய்த உம்முடைய மக்களுக்கு மன்னித்தருளும்.

40இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

41தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.

42தேவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும்” என்றான்.

குறிக்கப்பட்டவை: நீங்கள் படிக்கும் மொழிபெயர்ப்பில், ஒவ்வொரு பதிவிலும் உள்ள சொற்கள். மிக அடிக்கடி வரும் சொற்கள் (“மற்றும்”, “அவன்”) குறிக்கப்படுவதில்லை; வேறு வடிவிலுள்ள சொல் குறிக்கப்படாமல் போகலாம்.

ஆதாரங்கள்: OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்