முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மே 2027 › 23 மே
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மே 10 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 23 மே, 2027
ஞாயிறு · தொனி 3
பண்டிகைகளும் புனிதர்களும்
பாஸ்காவின் நான்காம் ஞாயிறு
பக்கவாதக்காரனின் ஞாயிறு
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
மாலை ஜெபம்: வாசகம்
21பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து, 22அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 23நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது. 24அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம். 4:1பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள். 2தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 4பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். 5அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 6நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.
மாலை ஜெபம்: வாசகம்
11பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம். 12தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 13அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். 14பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம். 15இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 16தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
மாலை ஜெபம்: வாசகம்
20தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்? 21தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம். 5:1இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான். 2நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம். 3தேவனிடத்தில் அன்புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை. 4தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம். 5இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
காலை ஜெபத்தின் நான்காம் நற்செய்தி
1வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். 2கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, 3உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். 5அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். 8அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, 9கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். 10இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. 11இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. 12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
நிருபம்
32பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். 33அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான். 34பேதுரு அவனைப் பார்த்து: “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். 35லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 36யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள். 37அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். 38யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். 39பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். 40பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். 41அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான். 42இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
நிருபம் (புனித சிமியோனுக்காக)
9தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம். 10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். 11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். 12எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். 13நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம். 14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 15கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன். 16ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
நற்செய்தி
1இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. 3அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான். 5முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். 6படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். 8இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. 10ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான். 12அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். 14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். 15அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
நற்செய்தி (புனித சிமியோனுக்காக)
54தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? 56இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார். 58அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 10 மே சிவில் நாள்காட்டியின் 23 மே ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்