Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 11 மார்ச்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · பிப்ரவரி 26 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 11 மார்ச், 2027

வியாழன் · பாலாடைக்கட்டி வாரம் · தொனி 7

பண்டிகைகளும் புனிதர்களும்

பாலாடைக்கட்டி வாரத்தின் வியாழன்

பாலாடைக்கட்டி வாரம்

இறைச்சி இல்லை; பால், முட்டை, மீன் அனுமதி

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம்

யூதா 1:11–25

11இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். 12இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும், 13தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. 14ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும், 15தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான். 16இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள். 17நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள். 18கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 19இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே. 20நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி, 21தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். 22அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து, 23பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள். 24உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும், 25தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

நற்செய்தி

லூக் 23:1–34, 44–56

1அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள். 3பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். 5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள். 6கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து, 7அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். 8ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, 9அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 10பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள். 11அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். 12முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள். 13பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து, 14அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. 15உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. 16எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான். 18மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். 19அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். 20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். 21அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள். 22அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 23அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது. 24அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, 25கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான். 26அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள். 28இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். 30அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். 31பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார். 32குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. 45சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. 46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 50யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான். 51அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான். 52அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, 53அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். 54அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது. 55கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, 56திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 26 பிப்ரவரி சிவில் நாள்காட்டியின் 11 மார்ச் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்