முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜனவரி 2027 › 18 ஜனவரி
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜனவரி 5 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 18 ஜனவரி, 2027
திங்கள் · பெந்தெகொஸ்தேக்குப் பின் 34-ஆம் வாரம் · தொனி 8
பண்டிகைகளும் புனிதர்களும்
தேவ வெளிப்பாட்டின் முந்தைய நாள்
ஒருநாள் நோன்பு · கடுமையான நோன்பு
நோன்பு: எண்ணெயுடன்
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
முதலாம் மணி ஜெபம்: தீர்க்கதரிசனம்
1வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும். 2அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். 5அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். 6அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும். 7வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும். 8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
முதலாம் மணி ஜெபம்: நிருபம்
25யோவான் தன் பணிகளை முடிக்கிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்? நான் அவர் இல்லை, இதோ, எனக்குப்பின்பு ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். 26சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 27எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும், அவரைத் தெரியாமலும், ஓய்வுநாட்களில் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களைத் தெரியாமலும், அவரை தண்டனைக்குள்ளாக்கியதினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். 28கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ஒன்றும் அவரிடத்தில் இல்லாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். 29அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 30தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார். 31இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். 32நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
முதலாம் மணி ஜெபம்: நற்செய்தி
1அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து: 2“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான். 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. 4இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது. 5அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய், 6தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? 8மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். 11மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
மூன்றாம் மணி ஜெபம்: தீர்க்கதரிசனம்
16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 17நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். 20மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
மூன்றாம் மணி ஜெபம்: நிருபம்
1அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு: 2நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 7அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள். 8பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
மூன்றாம் மணி ஜெபம்: நற்செய்தி
1தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம். 2“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி; 4யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். 5அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். 7அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. 8நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
ஆறாம் மணி ஜெபம்: தீர்க்கதரிசனம்
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
ஆறாம் மணி ஜெபம்: நிருபம்
3கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? 4மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். 5ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. 10அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ஆறாம் மணி ஜெபம்: நற்செய்தி
9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். 11அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 12உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். 13அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். 14யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: 15காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
ஒன்பதாம் மணி ஜெபம்: தீர்க்கதரிசனம்
8பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்; 9கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். 10அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். 11என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். 12இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். 13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். 14சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள். 15ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஒன்பதாம் மணி ஜெபம்: நிருபம்
11ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது. 12நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, 13நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 14அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 3:4நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். 6தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, 7அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக, அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்மேல் சம்பூரணமாகப் பொழிந்தருளினார்.
ஒன்பதாம் மணி ஜெபம்: நற்செய்தி
13அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். 14யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். 15இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான். 16இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.
மாலை ஜெபம்: வாசகம்
1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். 2பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. 4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. 6பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். 7தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. 8தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. 9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. 10தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. 12பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.
மாலை ஜெபம்: வாசகம்
15அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. 16நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். 17எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். 21மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. 22இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். 27அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். 28தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.
மாலை ஜெபம்: வாசகம்
22பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள். 23அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது. 24அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். 25மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: 26நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார். 27பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள். 16:1இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
மாலை ஜெபம்: வாசகம்
7யெகோவா யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். 8உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தான் நதியில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். 15யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, 16மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். 17எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
மாலை ஜெபம்: வாசகம்
6பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள். 7தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். 8அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள். 9அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான். 10அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான். 11அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். 12அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். 13பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, 14எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
மாலை ஜெபம்: வாசகம்
9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். 10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். 11அதற்கு நாகமான் கடுங்கோபம்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து, தன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி தொழுநோயை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். 12நான் மூழ்கிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, கோபத்தோடே திரும்பிப்போனான். 13அவனுடைய வேலைக்காரர்கள் அருகில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? மூழ்கி எழும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். 14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.
மாலை ஜெபம்: வாசகம்
16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 17நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். 20மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
மாலை ஜெபம்: வாசகம்
1யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள். 2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் என்று பெயரிட்டான். 3பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து: 4“நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடம் போய், நான் இதுவரை லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான்” என்று சொல்லுவதற்குக் கட்டளைகொடுத்துத் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினான். 6அந்த ஆட்கள் யாக்கோபினிடத்திற்குத் திரும்பிவந்து: “நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள். 7அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, கலக்கமடைந்து, தன்னிடத்திலிருந்த மக்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து: 8ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான். 9பின்பு யாக்கோபு: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற யெகோவாவே, 10அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
மாலை ஜெபம்: வாசகம்
5அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். 6அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள். 7அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள். 8அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். 9பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
மாலை ஜெபம்: வாசகம்
36அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால், 37இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான். 38அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். 39அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். 40அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
மாலை ஜெபம்: வாசகம்
30அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து: 31உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, யெகோவாவுடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, 32அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி, 33விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். 34பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள். 35அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். 36மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும். 37யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். 38அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. 39மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள்.
மாலை ஜெபம்: வாசகம்
19பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். 20அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, 21அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 22எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
மாலை ஜெபம்: வாசகம்
8பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்; 9கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். 10அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். 11என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். 12இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். 13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். 14சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள். 15ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
நிருபம் (தேவ வெளிப்பாட்டின் முந்தைய நாளுக்காக)
19நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். 20யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன். 21நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன். 22பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். 23நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன். 24பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 25பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன். 27மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.
நற்செய்தி (தேவ வெளிப்பாட்டின் முந்தைய நாளுக்காக)
1திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும், 2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. 3அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும், 4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும், 5மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, 6அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். 7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? 8மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான். 10அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான். 12வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். 13அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான். 15யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது, 16யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். 18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
நீரின் பெரிய ஆசீர்வாதம்
1வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும். 2அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். 5அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். 6அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும். 7வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும். 8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
நீரின் பெரிய ஆசீர்வாதம்
1ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். 2நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். 3உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். 5இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; 6யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். 8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். 9பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 10மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். 12நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். 13முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும்.
நீரின் பெரிய ஆசீர்வாதம்
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
நீரின் பெரிய ஆசீர்வாதம் (நிருபம்)
1இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள். 2எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். 4எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
நீரின் பெரிய ஆசீர்வாதம் (நற்செய்தி)
9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். 11அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 5 ஜனவரி சிவில் நாள்காட்டியின் 18 ஜனவரி ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்