Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜனவரி 2027 › 9 ஜனவரி

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · டிசம்பர் 27 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 9 ஜனவரி, 2027

சனி · பெந்தெகொஸ்தேக்குப் பின் 32-ஆம் வாரம் · தொனி 6

பண்டிகைகளும் புனிதர்களும்

கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய சனி

கிறிஸ்துமஸ் காலம் (ஸ்வியாத்கி)

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம் (கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய சனிக்காக)

1 தீமோ 6:11–16

11நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள். 12விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். 13நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி, 14எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 15இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 16அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

நிருபம்

1 தெச 5:14–23

14மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள். 15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள். 16எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். 17இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். 18எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 19ஆவியை அவித்துப்போடாமலிருங்கள். 20தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள். 21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 22தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள். 23சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

நிருபம் (புனித ஸ்தேவானுக்காக)

அப் 6:8–7:5, 47–60

8ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். 9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள். 10அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது. 11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு; 12மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; 13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்; 14எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள். 15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள். 7:1பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். 2அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: 3நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார். 4அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். 5இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். 47சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். 48ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை. 49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது; 50இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. 51“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். 52தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள். 53தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான். 54இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். 55அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: 56அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். 57அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து, 58அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள். 59அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள். 60அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.

நற்செய்தி (கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய சனிக்காக)

மத் 12:15–21

15இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி, 16தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். 17ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது: 18“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார். 19வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. 20அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.

நற்செய்தி

லூக் 16:10–15

10கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான். 11அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்? 12வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? 13எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார். 14இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள். 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.

நற்செய்தி (புனித ஸ்தேவானுக்காக)

மத் 21:33–42

33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான். 34அறுவடைக்காலம் நெருங்கியபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான். 35தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார். 41அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து, ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள். 42இயேசு அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது, அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 27 டிசம்பர் சிவில் நாள்காட்டியின் 9 ஜனவரி ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்