முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜனவரி 2027 › 10 ஜனவரி
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · டிசம்பர் 28 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 10 ஜனவரி, 2027
ஞாயிறு · தொனி 7
பண்டிகைகளும் புனிதர்களும்
பெந்தெகொஸ்தேக்குப் பின் 32-ஆம் ஞாயிறு
கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய ஞாயிறு
கிறிஸ்துமஸ் காலம் (ஸ்வியாத்கி)
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
காலை ஜெபத்தின் பத்தாம் நற்செய்தி
1இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது: 2சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 3சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 4விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள். 5இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள். 6அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள். 7ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான். 8மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். 9அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள். 10இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். 11சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. 13அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். 14இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
நிருபம் (கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய ஞாயிறுக்காக)
11மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 15அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; 17எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
நற்செய்தி (கிறிஸ்து பிறப்புக்குப் பிந்தைய ஞாயிறுக்கும் தேவமாதாவுக்குமாக)
13அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 16அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான். 17“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று, 18எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 19ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி: 20“நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான். 21அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். 22ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய், 23நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 28 டிசம்பர் சிவில் நாள்காட்டியின் 10 ஜனவரி ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்