முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › அக்டோபர் 2027 › 24 அக்டோபர்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · அக்டோபர் 11 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 24 அக்டோபர், 2027
ஞாயிறு · தொனி 1
பண்டிகைகளும் புனிதர்களும்
பெந்தெகொஸ்தேக்குப் பின் 18-ஆம் ஞாயிறு
ஏழாம் பொதுச்சங்கத்தின் பிதாக்கள்
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
மாலை ஜெபம்: வாசகம்
14தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய், 15இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி, 16அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். 17அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, 19அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
மாலை ஜெபம்: வாசகம்
8இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், யெகோவா உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். 9அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது. 10உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள். 11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 15ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன். 16அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். 17நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,
மாலை ஜெபம்: வாசகம்
14இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். 15ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். 17உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. 18அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். 19நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. 20உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே.
காலை ஜெபத்தின் ஏழாம் நற்செய்தி
1வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். 2உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். 3அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். 4பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, 5அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, 7துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். 8முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். 9அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள். 10பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
நிருபம்
6பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். 7அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். 8மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். 9வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். 10விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். 11நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.
நிருபம் (பிதாக்களுக்காக)
7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். 9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே. 10நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. 11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும். 12அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார். 13ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். 14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். 15ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். 16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.
நற்செய்தி
11மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள். 12அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். 13இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, 14அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். 16எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
நற்செய்தி (பிதாக்களுக்காக)
1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து: 2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 3ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். 5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். 7நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. 10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 12நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 11 அக்டோபர் சிவில் நாள்காட்டியின் 24 அக்டோபர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்