முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › அக்டோபர் 2027 › 3 அக்டோபர்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · செப்டம்பர் 20 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 3 அக்டோபர், 2027
ஞாயிறு · தொனி 6
பண்டிகைகளும் புனிதர்களும்
பெந்தெகொஸ்தேக்குப் பின் 15-ஆம் ஞாயிறு
சிலுவை உயர்த்துதலுக்குப் பிந்தைய ஞாயிறு
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
காலை ஜெபத்தின் நான்காம் நற்செய்தி
1வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். 2கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, 3உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். 5அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். 8அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, 9கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். 10இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. 11இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. 12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
நிருபம் (சிலுவை உயர்த்துதலுக்குப் பிந்தைய ஞாயிறுக்காக)
16நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. 17கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே. 18நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன். 19தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. 20கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
நிருபம்
6இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார். 7இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; 9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. 10கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது. 13விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம். 14கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
நற்செய்தி (சிலுவை உயர்த்துதலுக்குப் பிந்தைய ஞாயிறுக்காக)
34பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். 35தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். 36மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? 38எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார். 9:1இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
நற்செய்தி
35அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். 37இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; 38இது முதலாம் பெரிய கட்டளை. 39இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. 40இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். 41பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: 42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். 43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. 45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். 46அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 20 செப்டம்பர் சிவில் நாள்காட்டியின் 3 அக்டோபர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்