முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஆகஸ்ட் 2027 › 4 ஆகஸ்ட்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜூலை 22 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 4 ஆகஸ்ட், 2027
புதன் · பெந்தெகொஸ்தேக்குப் பின் ஏழாம் வாரம் · தொனி 5
பண்டிகைகளும் புனிதர்களும்
Holy Myrrhbearer and Equal-to-the-Apostles Mary Magdalene (1st C)
நோன்பு நாள்
நோன்பு: எண்ணெயுடன்
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
நிருபம்
12மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 13அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 14ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். 15ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 16மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? 17தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன். 18ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. 19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம். 20அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும். 21அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய். 22கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான். 23நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள். 24சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.
நிருபம் (புனித மகதலேனா மரியாளுக்காக)
2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே. 3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்: 4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா? 5மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா? 6அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை? 7எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்? 8இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ? 10நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.
நற்செய்தி
35அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள். 15:1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து: 2உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். 3அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. 5நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, 6உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள். 7மாயக்காரர்களே, உங்களைக்குறித்து: 8இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது; 9மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.” 10பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள். 11வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
நற்செய்தி (புனித மகதலேனா மரியாளுக்காக)
1பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள். 2பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், 3ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 22 ஜூலை சிவில் நாள்காட்டியின் 4 ஆகஸ்ட் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்