Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஆகஸ்ட் 2027 › 1 ஆகஸ்ட்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜூலை 19 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 1 ஆகஸ்ட், 2027

ஞாயிறு · தொனி 5

பண்டிகைகளும் புனிதர்களும்

பெந்தெகொஸ்தேக்குப் பின் ஆறாம் ஞாயிறு

முதல் ஆறு பொதுச்சங்கங்களின் பிதாக்கள்

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம் (பிதாக்களுக்காக)

ஆதி 14:14–20

14தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய், 15இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி, 16அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். 17அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, 19அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

மாலை ஜெபம்: வாசகம் (பிதாக்களுக்காக)

உபா 1:8–11, 15–17

8இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், யெகோவா உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். 9அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது. 10உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள். 11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 15ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன். 16அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். 17நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

மாலை ஜெபம்: வாசகம் (பிதாக்களுக்காக)

உபா 10:14–21

14இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். 15ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். 17உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. 18அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். 19நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. 20உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே.

மாலை ஜெபம்: வாசகம்

இந்த மொழிபெயர்ப்பில் இல்லை

மாலை ஜெபம்: வாசகம்

இந்த மொழிபெயர்ப்பில் இல்லை

மாலை ஜெபம்: வாசகம்

இந்த மொழிபெயர்ப்பில் இல்லை

காலை ஜெபத்தின் ஆறாம் நற்செய்தி

லூக் 24:36–53

36இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார், 44அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். 45அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து: 46எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; 47அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. 48நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள். 49என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். 50பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். 51அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 52அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து, 53நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

நிருபம்

ரோமர் 12:6–14

6நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும். 7ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும். 9உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். 10சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 11அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். 12நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள். 13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள். 14உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.

நிருபம் (பிதாக்களுக்காக)

எபி 13:7–16

7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். 9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே. 10நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை. 11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும். 12அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார். 13ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். 14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். 15ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். 16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

நிருபம் (புனித செராபிமுக்காக)

கலா 5:22–6:2

22ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை. 24கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம். 26வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம். 6:1சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. 2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள்.

நற்செய்தி

மத் 9:1–8

1அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். 2அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 3அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 4இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 5உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? 6பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். 7உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். 8மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

நற்செய்தி (பிதாக்களுக்காக)

யோவா 17:1–13

1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து: 2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 3ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். 5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். 7நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. 10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 12நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.

நற்செய்தி (புனித செராபிமுக்காக)

லூக் 6:17–23

17பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள். 18அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 19அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள். 20அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது. 21இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள். 22மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். 23“அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 19 ஜூலை சிவில் நாள்காட்டியின் 1 ஆகஸ்ட் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்