முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 29 ஜூன்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 29 ஜூன், 2027
செவ்வாய் · பொதுக்காலத்தின் 13-ஆம் வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
புனித பேதுரு, புனித பவுல், அப்போஸ்தலர்கள்
பெருவிழா · திருவழிபாட்டு நிறம்: சிவப்பு
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
1அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது. 4அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான். 5அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள். 6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது. 8தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். 9அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான். 10அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான். 11பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.
பதிலுரைப் பாடல்
1தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். 2யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 4நான் யெகோவாவை தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 5அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. 6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். 7யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். 8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
இரண்டாம் வாசகம்
6ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது. 7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார். 17கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், யூதரல்லாத எல்லோரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன். 18கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
நற்செய்தி
13பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
இன்றைய புனிதர்கள்
- புனித பேதுரு, புனித பவுல், அப்போஸ்தலர்கள்
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்