Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 24 ஜூன்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜூன் 11 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 24 ஜூன், 2027

வியாழன் · பெந்தெகொஸ்தேக்குப் பின் முதலாம் வாரம் · தொனி 7

பண்டிகைகளும் புனிதர்களும்

Holy Apostles Bartholomew and Barnabas (1st C)

நோன்பில்லா வாரம்

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 1:3–9

3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 4தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார். 5கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 6இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். 8நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து, 9உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 1:13–19

13ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். 14நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, 15உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். 16நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 17அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள். 18உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், 19குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 2:11–24

11பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி, 12யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 13நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். 14மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 15நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 16சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள். 17எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். 18வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும். 20நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். 21இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார். 22அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; 23அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார். 24நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

காலை ஜெபம்: நற்செய்தி

யோவா 21:15–25

15அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார். 20பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான். 21அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார். 24அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம். 25இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

நிருபம்

ரோமர் 1:28–2:9

28தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 29அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, 30கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, 31உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். 32இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள். 2:1ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். 2இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? 4அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 6தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். 7சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். 8சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். 9முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.

நிருபம் (அப்போஸ்தலர்களுக்காக)

அப் 11:19–26, 29–30

19ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். 21கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள். 22எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள். 23அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான். 24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். 25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான். 26அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது. 29அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

நற்செய்தி

மத் 5:27–32

27விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான். 29உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். 30உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். 31தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. 32நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

நற்செய்தி (அப்போஸ்தலர்களுக்காக)

லூக் 10:16–21

16சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார். 17பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. 20ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 11 ஜூன் சிவில் நாள்காட்டியின் 24 ஜூன் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்