முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 13 ஜூன்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மே 31 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 13 ஜூன், 2027
ஞாயிறு · தொனி 6
பண்டிகைகளும் புனிதர்களும்
பாஸ்காவின் ஏழாம் ஞாயிறு
முதலாம் பொதுச்சங்கத்தின் பரிசுத்த பிதாக்கள்
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
மாலை ஜெபம்: வாசகம்
14தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய், 15இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி, 16அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். 17அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, 19அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
மாலை ஜெபம்: வாசகம்
8இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், யெகோவா உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். 9அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது. 10உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள். 11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 15ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன். 16அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். 17நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,
மாலை ஜெபம்: வாசகம்
14இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். 15ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். 17உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. 18அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். 19நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. 20உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே.
காலை ஜெபத்தின் பத்தாம் நற்செய்தி
1இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது: 2சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 3சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 4விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள். 5இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள். 6அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள். 7ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான். 8மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். 9அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள். 10இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். 11சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. 13அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். 14இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
நிருபம்
16பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம். 17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான். 18அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 28ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள். 29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 31எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். 32இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 33ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. 34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. 35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். 36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.
நற்செய்தி
1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து: 2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 3ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். 5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். 7நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. 10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 12நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 31 மே சிவில் நாள்காட்டியின் 13 ஜூன் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்