Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 6 ஜூன்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மே 24 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 6 ஜூன், 2027

ஞாயிறு · தொனி 5

பண்டிகைகளும் புனிதர்களும்

பாஸ்காவின் ஆறாம் ஞாயிறு

குருடனின் ஞாயிறு

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

காலை ஜெபத்தின் எட்டாம் நற்செய்தி

யோவா 20:11–18

11மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து, 12இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள். 13அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள். 15இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள். 16இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம். 17இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.

நிருபம்

அப் 16:16–34

16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். 17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள். 18அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது. 19அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். 20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, 21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். 22அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். 24அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். 25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. 27சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான். 28அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். 29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து, 30அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். 31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.

நற்செய்தி

யோவா 9:1–38

1அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். 2அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான். 4பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது. 5நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார். 6இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான். 8அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள். 9சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். 10அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். 11அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான். 12அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். 13குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள். 14இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. 15ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான். 16அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது. 17மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். 18அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து, 19அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். 20பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். 21இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். 22அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். 23அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள். 24ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். 25அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். 26அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். 27அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான். 28அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர். 29மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள். 30அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம். 31பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 32பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. 33அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். 34அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். 35அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார். 36அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான். 37இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். 38உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 24 மே சிவில் நாள்காட்டியின் 6 ஜூன் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்