Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மே 2027 › 8 மே

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 25 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 8 மே, 2027

சனி · ஒளிமய வாரம் · தொனி 8

பண்டிகைகளும் புனிதர்களும்

ஒளிமய வாரத்தின் சனி

நோன்பில்லா வாரம்

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம் (புனித மாற்குவுக்காக)

யாக் 1:1–12

1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது. 2என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது, 3உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும். 5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான். 7அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக. 8ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான். 9ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும். 10ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான். 11சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான். 12சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

மாலை ஜெபம்: வாசகம் (புனித மாற்குவுக்காக)

யாக் 1:13–27

13சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை. 14அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். 16என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம். 17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை. 18அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார். 19ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்; 20மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. 21ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 22அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். 23ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்; 24அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான். 25ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான். 26உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். 27திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.

மாலை ஜெபம்: வாசகம் (புனித மாற்குவுக்காக)

யாக் 2:1–13

1என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள். 2ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, 3அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 4உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? 5என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? 6நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? 7உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? 8உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். 10எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். 11ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். 12சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். 13ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

காலை ஜெபம்: நற்செய்தி (புனித மாற்குவுக்காக)

லூக் 10:1–15

1இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 2அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம். 5ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். 6சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள். 8பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, 9அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும். 15வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,

நிருபம்

அப் 3:11–16

11சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன? 13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். 14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு, 15ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். 16அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.

நிருபம் (புனித மாற்குவுக்காக)

1 பேது 5:6–14

6ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள். 7அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 8தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். 9விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 10கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 11அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 12உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். 13உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 14ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.

நற்செய்தி

யோவா 3:22–33

22இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். 23சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை. 25அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. 26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். 28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. 30அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர். 32தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை. 33அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.

நற்செய்தி (புனித மாற்குவுக்காக)

மாற் 6:7–13

7இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, 8வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்; 9காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார். 10பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். 11யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 25 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 8 மே ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்