Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மே 2027 › 4 மே

கத்தோலிக்க நாள்காட்டி

தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 4 மே, 2027

செவ்வாய் · பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரத்தின் செவ்வாய்

வார நாள் · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை

அன்றைய வாசகங்கள்

முதல் வாசகம்

அப் 16:22–34

22அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். 24அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். 25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. 27சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான். 28அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். 29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து, 30அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். 31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.

பதிலுரைப் பாடல்

சங் 138:1–3, 7–8

1தாவீதின் பாடல். உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். 3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். 8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

நற்செய்தி

யோவா 16:5–11

5இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. 6ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. 7நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்