Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மார்ச் 2027 › 1 மார்ச்

கத்தோலிக்க நாள்காட்டி

தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 1 மார்ச், 2027

திங்கள் · தவக்காலத்தின் மூன்றாம் வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தின் திங்கள்

வார நாள் · திருவழிபாட்டு நிறம்: ஊதா

அன்றைய வாசகங்கள்

முதல் வாசகம்

2 இராஜா 5:1–15

1சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் எஜமானிடத்தில் பெரியவனும் மதிக்கத்தக்கவனுமாக இருந்தான்; அவனைக்கொண்டு யெகோவா சீரியாவுக்கு வெற்றியைக் கொடுத்தார்; மிகவும் பலசாலியாகிய அவனோ தொழுநோயாளியாக இருந்தான். 2சீரியாவிலிருந்து படைகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 3அவள் தன் எஜமானியைப் பார்த்து: என் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய தொழுநோயை நீக்கிவிடுவார் என்றாள். 4அப்பொழுது நாகமான் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் சொன்ன காரியங்களைத் தன் எஜமானிடத்தில் அறிவித்தான். 5அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவிற்கு கடிதம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத்தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் எடையுள்ள பொன்னையும், பத்து மாற்றுஉடைகளையும் எடுத்துக்கொண்டுபோய், 6இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அதிலே: இந்தக் கடிதத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவனுடைய தொழுநோயை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. 7இஸ்ரவேலின் ராஜா அந்த கடிதத்தை வாசித்தபோது, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனிதனை தொழுநோயிலிருந்து சுகப்படுத்தவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் கடிதம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க வாய்ப்பைத் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான். 8இஸ்ரவேலின் ராஜா தன் உடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனிதனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய உடைகளை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவிற்குச் சொல்லியனுப்பினான். 9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். 10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். 11அதற்கு நாகமான் கடுங்கோபம்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து, தன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி தொழுநோயை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். 12நான் மூழ்கிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, கோபத்தோடே திரும்பிப்போனான். 13அவனுடைய வேலைக்காரர்கள் அருகில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? மூழ்கி எழும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். 14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான். 15அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடு தேவனுடைய மனிதனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேனுடைய கையிலிருந்து ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.

பதிலுரைப் பாடல்

சங் 42:1–2; 43:3–4

1கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 2என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 43:3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும். 4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.

நற்செய்தி

லூக் 4:24–30

24ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள். 26இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான். 27அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 28ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, 29எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.

பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்