முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › பிப்ரவரி 2027 › 14 பிப்ரவரி
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · பிப்ரவரி 1 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 14 பிப்ரவரி, 2027
ஞாயிறு · தொனி 4
பண்டிகைகளும் புனிதர்களும்
சகேயுவின் ஞாயிறு
நோன்பு
நோன்பு இல்லை
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
காலை ஜெபத்தின் நான்காம் நற்செய்தி
1வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். 2கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, 3உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். 5அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். 8அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, 9கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். 10இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. 11இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. 12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
நிருபம்
9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது. 10இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. 13நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு. 14சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம். 15உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
நிருபம் (புனித திரிபோனுக்காக)
28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 29தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். 31இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? 32தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி? 33தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. 35“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும், 36கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? 37இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. 38மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், 39உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
நற்செய்தி
1இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது, 2வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், 3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல், 4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். 5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். 6அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான். 7அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். 8சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான். 9இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே. 10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
நற்செய்தி (புனித திரிபோனுக்காக)
19இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. 20ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 1 பிப்ரவரி சிவில் நாள்காட்டியின் 14 பிப்ரவரி ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்